பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/340

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கேட்கிறார்? "இரக்க வேண்டிய அவசியம் வந்தால், தயவு செய்து உள்ளதைக் கரப்போரிடத்தில் சென்று இரக்காதீர்கள்!" என்று இரந்து கேட்கிறார்.

கரந்தும், கடுஞ்சினத்தோடும், உவகையின்றியும், தீராத் துன்பமாகக் கருதி, ஒரோவழி கொடுப்போர் கொடுத்தாலும், அப்பொருளால் உடலுக்கு உணவு ஊட்டிய வழி, மானம் மரியாதை கொஞ்சம் உடையவராக இருப்பின் அந்த உடம்பும் நில்லாது. உண்ட வழியும் சுருங்கிவிடும். கொஞ்சம் கூட மானமில்லாதவர்களுக்குக் கவலையில்லை.

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று

என்பது குறள்.

திருவள்ளுவருக்கு நெஞ்சு உருகுகிறது. பலர் வறுமையின் கொடுமையால் இல்லையென்று கூறுபவர்களிடம் சென்று இரந்து நிற்கும் கொடுமையை நினைந்து நெஞ்சு உருகுகின்றார். திருவள்ளுவருக்கு இங்ஙனம் இரப்போர்மாட்டு ஓர் இரக்க உணர்ச்சி பிறக்கிறது.

ஆனால் இரப்பவர்களுக்குக் கொடுக்காமல் கரந்து வாழும் மனிதர்களை நோக்கி இரக்க உணர்ச்சியும், உள்ள உருக்கமும் எங்கோ ஓடிவிடுகிறது. மனச்சான்று படைத்தோர் இரக்க நேரிடின் தம் விதியினை நொந்து உருகி வேறு வழியின்றியே இரப்பர். மனச்சான்று இல்லாதவரோ இரத்தலையே பிழைப்பாகக் கொள்பவர்.

அவருக்கு உயிர் உருகா; ஊனும் உருகா. காரணம் மானம் மரியாதைகளைவிட்ட பிணம். கரப்பவர் கரந்தாலும், அவர்தம் உள்நெஞ்சுகரக்கும் நிலைகண்டு இரங்கும்; உருகும். ஆனாலும் பொருட்பிடிப்பு அந்த உருக்கத்தை மூடி மறைத்து விடுகிறது.