பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/343

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

339


முயற்சியில் தாழ்ந்தவர்களல்லர். உழைக்காதவர்களுமல்லர். நேரிய முயற்சியும், கடுமையான உழைப்பும் உடையவர்களேயாம். உழைப்பாளிகள் இரக்கும் நிலையடைந்தது சமுதாயச் சீர்கேட்டினாலேயாம். அந்தச் சீர்கேட்டைத் தடுத்து நிறுத்துவது அரசின் கடமை. இன்றைய மக்கள் சமுதாயத்திலும் உழைப்பவர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். உழைக்காதவர்களில் பலர் உல்லாச வாழ்க்கையில் இருக்கிறார்கள். எனவே, இரந்து வாழ்கின்ற நிலைமைக்கும் காரணமான அரசு கெடுக! என்கிறார்.

"கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக" என்றார் வள்ளலாரும். இங்கு 'இயற்றியான்' என்பது கடவுளைச் சாராது. ஆதலால், நாம் நம்முடைய நாட்டு மக்களை வறுமைக் கடலினின்றும் கரையேற்ற, நெறிவழிப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். பிறரிடம் இரந்து நம் வறுமை போகாது.

கயமை

திருக்குறள் ஓர் ஒப்பற்ற முழுமுதல் அறநூல். திருவள்ளுவர் மனிதர்களைக் கெட்டவர்களென்று கருதியோ, அல்லது கெட்டவர்களாக ஆக்கியோ எளிதில் ஒதுக்குபவர் அல்லர். அவர் தம் நூல்வழி மிகவும் சாதாரண சராசரிக்கும் கீழ்ப்பட்ட மனிதனை வளர்க்கவே தமது திருக்குறள் மூலம்

முயற்சி செய்கின்றார்; கற்பிக்கின்றார்; சொல்லித் தருகின்றார்; வழி நடத்துகின்றார்; ஊக்கமூட்டுகின்றார்; துணை சேர்க்கின்றார்; தீயன பிரித்து ஒதுக்கிக் காட்டுகின்றார்; சில இடங்களில் குறிப்பால் உணர்த்தினார்; பல இடங்களில் வெளிப்படையாக எடுத்தோதினார்.