பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/346

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்

என்பது குறள். வலியிலும், பிறதுறைகளிலும் தம்மின் கீழ்ப்பட்டவரைப் பார்த்தாலும் அவரின் நான் உயர்ந்தேனென்றும் செம்மாக்கும். எப்பொழுதும் மேல் நோக்கி ஒப்பெடுக்க வேண்டுமேயன்றி, கீழ்நோக்கி ஒப்பு நோக்கக் கூடாது. அதனாலன்றோ, மண்ணில் முளைக்கும் முளையும் வானோக்கி முளை விடுகின்றது.

கீழ் மக்கள் படாடோபமாக அரட்டி உருட்டினாலும் அச்சத்திலும் சிறந்தவர்கள். கீழ்மக்கள் அடங்கி நடப்பதோ அல்லது அதட்டி நடப்பதோ நடிப்பேயாகும். அவர்களுக்கு இயல்பாக அடக்கமுமில்லை; ஆண்மையுமில்லை. அவர்கள் அடி உதைக்கு அஞ்சுவார்கள். அல்லது தனக்குக் கிடைக்கக்கூடிய இலாபம் போய்விடுமோ என்றும் அஞ்சுவார்ககள். கீழ்மக்கள் எப்பொழுதாவது அடங்கி நடந்தால், அதுமற்றவருக்கு அச்சத்தைத்தரும் என்றும் கொள்ளலாம், எந்தக் காரியத்தை முடித்துக் கொள்ளக் கருதி இந்த நாடகத்தைத் தொடங்கியிருக்கின்றாரோ என்று! இதனை,

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது

என்றார். 'அச்சம் கீழ்களது ஆசாரம்' என்றால் சான்றோருக்கு அச்சம் வேண்டாவோ? அஞ்சுவது அஞ்சல் சான்றோர் கொள்கை. அதாவது பழி பாவங்களுக்கு அஞ்ச வேண்டும். கீழ்மக்களுக்கோ பழி பாவம் பால் பாயசம்! அவர்கள் அஞ்சுவதெல்லாம் அடிக்கும் உதைக்குமேயாம்.

கீழ்மக்களோடு உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. ஒரோ வழி தவிர்க்க முடியாத நிலைமையால் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படின் அளவோடு