பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/350

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆழ்ந்த கருத்தமைந்திருக்கிறது. ஆதலால், கயவர்கள் காண உண்ணலையும் உடுத்தலையும் ஊர்திகளில் செல்லலையும் தவிர்ப்பது நல்லது. அதனால் தான் போலும், 'கண்ணேறு படுகிறது' என்று நமது நாட்டுத் தாய்மார்கள் சொல்லுகிறார்கள். இதுவும் உண்மையேயாம். அன்று உண்ணல் உடுத்தல் முதலிய வாழ்க்கையில் அழுக்காறு ஏற்பட்டது. இன்று பதவி, செல்வாக்கு, புகழ் ஆகிய துறைகளிலும் மிகவும் அதிகமாகவே அழுக்காறு ஏற்படுகிறது. அதன் காரணமாக நாள்தோறும் நாட்டில் பிறர்பழி தூற்றும் மேடைகள் பெருகி வருகின்றன.

குற்றமே கண்டு கூறிப் பழகினால், குணம் காணும் பழக்கமும் வராது; குணங்களும் வளராது. ஆதலால் பொது வாழ்க்கையிலும் கூட அழுக்காற்றின் வழிப்பட்ட கண்ணேறு படாமல் அடக்கமாக, எளிமையாக, தம்மைப் புகழ் வந்து அடையாமல் தற்காத்துக் கொள்ளச் செய்வது நெடிய பயனைத் தரும்.

கயவர் தம்மொடு பழகினார்க்கு ஏதாவது கேடுவந்த பொழுது, அந்தக் கேட்டினால் அவர்களுக்கு இறுதி நேரிடும் வண்ணம் விரைந்து எற்றித் தள்ளி விடுவர். அப்படிச் செய்யத் தவறினாலும் உற்றஇடத்து உதவி செய்யாது நீங்கிவிடுவர். ஆதலால் தோற்றத்தால், பேச்சால் கயவர் நல்லவர் போலவும் வலியவர் போலவும் காணப் பெற்றாலும் அவர்களுடன் பழகி உறவு கொள்ளுதல் ஒருபொழுதும் உதவிசெய்யாது. உதவிசெய்வதற்குப்பதில் கேட்டினை இரட்டிப்பாகவும் விரைவாகவும் கொண்டுவந்தாலும் வரலாம். இதனை,

எற்றிற் குரியர் கயவர்ஒன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து

என்று கூறுகிறது குறள்.