பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நுட்பமான ஒரு செயல்முறை, மனப்பாடம் செய்தல் நினைவுக்குப் பயன்படலாம். ஆனால், அது முழுமையான கல்வியாகாது. கற்கும்நூலை, அந்த நூலாசிரியன் உணர்வோடு ஒன்றிக் கற்க வேண்டும்.

எழுதப்பட்டவையெல்லாம் நூல்களாகா, அறியாமையின் மொத்த உருவம் எனத் திகழும் சிலர்கூட நூல்களை எழுதிவிடலாம். அவை, மனித உருவில் நடமாடும் பேய்களைப் போல நூல்வடிவில் உலவும் 'சைத்தான்கள்." இந்தச் சைத்தான்களைப் பிடித்துக் கொண்ட சிலர், ஆய்வுக்குரிய நூல் எது என்று முடிவு செய்யாமலே தவறான நூல்களை மையமாகக் கொண்டே பேய் பிடித்த மனிதர்களைப் போலப் பேசியும் எழுதியும் வருவர்.

இன்று பகுத்தறிவின் பேரால் பரப்பப்பெற்று வரும் நாத்திகம் இதுவே. கார்ல்மார்க்சும் நாத்திகரே லெனினும் நாத்திகரே! பழங்காலத்திலிருந்த புத்தர் கடவுள் நம்பிக்கை யில்லாதவராதலால் அவரும் நாத்திகரே! ஆனால், அவர்களுடைய நாத்திகம் அறிவின் பாற்பட்டது; திறனாய்வுக்குத் தகுதியுடையது.

அவர்களுடைய நாத்திகத்தால் மனித சமுதாயத்திற்குப் பெரிய கேடு வந்துவிடாது. காரணம் கடவுள் நம்பிக்கையின் பேரால் எத்தகைய நெறிமுறைகளை ஒழுக்கங்களைத் தோற்றுவிக்க முயற்சி செய்யப் பெற்றதோ அதுபோலவே மார்க்சீயம் லெனினியம் ஆகியவையும், ஒரு புதிய நெறி முறைக் கோட்பாடுகளை வகுத்துக் கொடுக்கின்றன. எப்படிக் கடவுள் நம்பிக்கையுடையவன் மனித உலகத்திற்குக் கேடு செய்யும் ஒழுக்கக்கேடு உள்ளவனாக இருக்க முடியாதோ அது போலவே உயர்ந்த கம்யூனிசக் கொள்கையுடையவனும் மனித உலகத்திற்குக் கேடு செய்யும் ஒழுக்கக் கேடுடையவனாக இருக்க முடியாது.