பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தேனெடுக்கும் தேனி, இதழ்களை எண்ணுவதில்லை; எடுப்பதுமில்லை. மலர்ச்செடியின் கொம்புகளை, காம்புகளை எடுப்பதில்லை. அது போலத்தான் நூலாசிரியன் படைப்புக்களில் நமக்குப் பயன்தரத்தக்க விழுமியவற்றையே ஏற்றுக் கொள்ள வேண்டும்; மற்றவற்றை மறந்து விடுதல் வேண்டும்.

அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

.


வாய்மை

வாழ்க்கையென்ற மாளிகைக்கு ஒழுக்கம் ஒளியூட்டுகிறது. அம்மாளிகைக்கு வளத்தை-வனப்பைச் சேர்ப்பது வாய்மையேயாம். நன்னெறியின் அடிப்படை வேறு. செயல்முறை வேறு. நன்னெறியின் அடிப்படை எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமை. அதுமட்டுமன்று, ஏற்புழி இன்பம் சேர்த்தல். இவ்வடிப்படை நியதிக்கு ஏற்றவாறு ஒழுகலாறுகள் அமையவேண்டும். ஒரோவழி ஒழுகலாறு அடிப்படை நன்னெறியோடு மாறுபடலாம். அங்ஙணம், மாறுபடும்பொழுது வழக்கத்தில் வந்த ஒழுகலாற்றுக்குப் பதில் நன்னெறியையே ஏற்றுக் கொள்ளவேண்டும். பகைவன் ஒருவன் துரத்திவர ஒருவன் அடைக்கலமாக வந்து சேர்ந் திருக்கிறான். தன்னிடம் அடைக்கலமாக வந்து ஒளிந்திருப்பவனை, பொய் சொல்லக்கூடாது என்ற நெறிவழி "இங்கே ஒளிந்திருக்கிறான்” என்று காட்டுவது நெறியாகாது. அது தோற்றத்தில் வாய்மைபோலத் தோன்றினாலும் வாய்மையன்று.