பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அதுபோல, இன்று பலர் மனத்தில் கறுப்பு வைத்து வேளிவேடம் புனைந்து நாடகமாடுகின்றனர்; நல்லனபோலக் காட்சியளிக்கும் தீயனவற்றைச் செய்கின்றனர். இவையெல்லாம் எப்படி அறமாக முடியும்? இதனைத் திருவள்ளுவர்,

மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

என்றார்.

மனிதனுக்கு இயற்கை துணை செய்வதைப் போல வேறு எதுவும் துணை செய்வதில்லை. மனிதன் இயல்பில் குறையுடையவனாக இருக்கிறான். ஆனால், அவனுடைய குறையை நிறை செய்யப் பலப்பல வழிகளை இயற்கை அளித்திருக்கிறது. ஐம்பொறிகள் குறையை நிறைவு செய்யும் வாயில்களேயாம்.

ஆனால், பலர் அறியாமையின் காரணமாக, பொறிகளைக் குற்றவழிப்படுத்துகின்றனர்; நிறை அழிகின்றனர். ஐம்பொறிகளும் அறிவின் வாயில்கள். ஒரோ வழி, தொடர்ந்து வாழும் உயிர்க்கு ஏற்படும் களைப்பை மாற்றுவதற்காகக் களிப்பினை நுகரும் வாயில்களாகவும் பொறிகளை இயற்கை அமைத்துத் தந்தது. அது மட்டுமன்று. பொறிகளால் மட்டுமே துய்க்கப்படும் இன்பம் அல்லது களிப்பு செழுமையானது அல்ல.

பொறிகள் வாயிலாகப் புலன்களுக்குச் சென்று துய்க்கும் உணர்வினைத் தரப்படுத்தித் துய்க்கும் பொழுது மகிழ்வு, இன்ப மகிழ்வு ஆகிறது. அத்தகைய மகிழ்வு உயிர்க்கு ஆக்கம் சேர்க்கின்றது. இன்ப அன்பிற்கு வாயிலாக அமைகின்றது. 'ஐம்புலன்கள் ஆர' என்பார் மாணிக்க வாசகர். இத்தகைய துய்ப்பில் உடல் வலிவு பெறுகிறது; வனப்புப் பெறுகிறது. உயிர்க்குரிய குறையை நிறைவு செய்யும்