பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



செல்வம்

"செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்” என்பது வள்ளுவர் திருவாக்கு செல்வங்களில் எல்லாம் சிறந்தது செவி வழியாகக் கேட்கும் கேள்விச் செல்வம். ஏன்? ஏனைச் செல்வங்களை யெல்லாம் பெறுதற்குத் துணையாய அறிவினை வழங்குவதில், கேள்வி துணை செய்வதைப் போலப் பிறிதொன்று துணை செய்வதில்லை. ஏன்? கற்கும் கல்வியின் மூலம் அறிவு பெற நூல்களைக் கற்கின்றோம்.

நூல்களை ஆக்கியோர் எல்லோரும் முழுமையான பட்டறிவுடையோர் என்று கூறுதல் இயலாது. அதோடு நூல்களின் ஆசிரியன் காலமும் வாழ்கின்ற நமது காலமும் மாறுபட்டன. ஆதலால், நூல்கள் நடைமுறை வாழ்க்கைக்கு ஒரளவுதான் துணை செய்யும். ஆனால், கேள்வியோ நமது காலத்திலேயே வாழும் மனிதர் சொல்வது; அதுமட்டுமல்ல. இங்கே சொல்லுபவர் பல நூல்களைக் கற்றவராகவும், அனுபவங்களைப் பெற்றவராகவும் இருப்பார். மேலும், நூலாசிரியன் சொல்லுகிற ஆசிரியன் அளவுக்கு உணர்விற் கலப்பதில்லை. ஆதலால், நூல்கள் கற்கும் முயற்சியிலும் சிறப்புடையதே ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் சொல்வதைக் கேட்பது.

இங்ஙனம், செவிச் செல்வம் உயர்ந்ததாயினும் நூல்களைக் கற்பதால் விளையும் தீங்கைவிடச் செவியினால் விளையும் தீங்கும் அதிகமாகின்றது. நூல்களைக் கற்க முயற்சி தேவை. இந்த முயற்சியை எளிதில் எல்லோரும் பெறுவ தில்லை. ஆனால், செவிகள் எப்போதும் திறந்த நிலையின; கேட்டுக்கொண்டேயிருக்கும் இயல்பின.

அதுபோலவே, நூலாசிரியர்களாக எல்லோரும் ஆகி விடுவதில்லை. மிகச் சிலர்தான் எழுதுகின்றனர். ஆனால், வாய் படைத்தவர்களெல்லாம் சொல்லுகின்றனர். எதைச் சொல்லுகின்றோம் என்று எண்ணிக்கூடப் பார்த்துச் சொல்லும் தகுதி யில்லாதவர்கள், இன்று சொல்லுகின்றனர்.