பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

83


நூலிலே விளையும் குற்றங்களை விடச் சொல்லிலே விளையும் குற்றங்கள் மிகுதி, வள்ளுவர் சொல்லிலே தோன்றும் குற்றங்களை, வகுத்தும் விரித்தும் கூறியுள்ளார்.

அதாவது, பயனில சொல், நயனில சொல், இன்னா கூறல், புறங்கூறல், பொய்மை, தீச்சொல் என்றெல்லாம் சொல்லில்வரும் குற்றங்களை எடுத்துக்காட்டியுள்ளார். வாய் படைத்தவர்கள் உண்ணலாம்; அது அவர்களின் ஏகபோக உரிமை, அந்த உரிமையில் நாம் யாரும் தலையிடத் தயாராயில்லை. ஆனால், வாய் படைத்தவரெல்லாம் சொல்லத் தொடங்கினால், அது மற்றவர்க்கு அல்லவா வேதனையாகிறது.

இன்று வதந்தி என்ற ஒரு புதுவகைச் சொல் சமுதாயத்தை எவ்வளவு அலைக்கழித்து வருகிறது! அது போலவே, அரசியலின் பேரால் நடைபெறும் மேடைகளில் இன்று வார்த்தைகளா வழங்கப்பெறுகின்றன! இல்லை, இல்லை வசையேதான்! ஆதலால், செவிச்செல்வம் உயர்ந் ததும் கூட! ஆனால் அதை அடைவது எளிதன்று. அதனால் தான் வள்ளுவம் "எனைத்தானும் நல்லவை கேட்க!” என்றது.

இன்று நிறைவான செவிச்செல்வம் மிகுதியும் கிடைப்பதில்லை. ஒன்றைச் சொல்லும் தகுதி, நிறைந்த பட்டறிவுடை யோருக்கேயுண்டு. ஆனால், இன்று நம் நாட்டில் ஒரு புதுவிதமான விவாதம் தொடங்கியுள்ளது. அது என்ன? சொல்லுகிறவருடைய சிந்தனையும் செயலும் ஒத்திருக்க வேண்டுமென்பது. இந்தக் கொள்கை, கொள்கை யளவில் தவறில்லை; அல்லது மனிதனின் பரிணாம வளர்ச்சி என்பதை மையமாகக் கொண்டு எண்ணும்பொழுது இக்கொள்கை நடைமுறைக்கு இசைந்ததன்று.

ஏரித்தண்ணிரில் வீழ்ந்து தவிக்கும் ஒருவன், கரையில் நிற்பவனை 'ஏரி ஆழமானது; வீழ்ந்து விடாதே!” என்று எச்சரிப்பதில் என்ன தவறு? ஒன்றில் வீழ்ந்து தத்தளிப்பவர் தானே மற்றவர்களை விழாதே என்று எச்சரிக்க முடியும்.