பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதுபோலவே வாழ்க்கையில் தவறுகள் செய்தவர்களும், தவறுகளை நினைந்து வருந்துபவர்களும், தவறுகளிலிருந்து மீளப் போராடிக் கொண்டிருப்பவர்களும் மற்றவர்களைத் தவறு செய்யாதே என்று கூறுவது தவறு அன்று. ஆயினும், சொல்பவர் முழுமைான அனுபவ முதிர்ச்சியுடைய வராகவும், கேட்போரிடம் கங்குகரையற்ற பரிவு உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

ஆதலால், செவி கேட்பதற்குரியது; கேட்பதன் மூலம் நிறைந்த ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்குரியது. ஆனால், செவிச் செல்வத்தைத் தேர்ந்து கேட்க வேண்டும்! தெளிந்து கைக்கொள்ள வேண்டும். இயல்பான வடிகட்டிகள் செவிகளுக்கு இல்லாததால், நாம் நம்முடைய பகுத்தறிவை வடிகட்டியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல், செவியிற் கேட்பதைச் செயலுக்குக் கொண்டுவரக் கூடாது. பகுத்தறி வோடு தொடர்பில்லாத செவிவழிச் சொற்கள், உணர்ச்சிகளையே தூண்டும். இவை அறிவுக்கும் பயன்படா. ஆள்வினைக்கும் துணை செய்யா, வாழ்க்கைக்கும் உதவா.

ஆதலால், செவியினை முறையாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வது அவசியம். வாய்ப்பிருந்து நல்ல செவிச் செல்வம் கிடைக்குமானால், கோடை மழை பெய்ததைப் போல ஆன்மா செழிக்கும். அதனால்தானே, ஆன்றோர் காலந்தொட்டு உணர்வைத் தரும் தகுதியில் நூலினும் மிகவும் சிறந்தவர் அதனை விளக்கிச் சொல்லும் ஆசிரியனே என்பதைச் சமய மரபில் தோன்றிய ஆலமர் செல்வனிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. செவிச்செல்வம் கொள்வோம்! தேர்ந்து கொள்வோம்! தெளிந்து செயற்படுவோம்!

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.