பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

89


மக்கள் சுதந்திரமாக வாழ்ந்தனர். உலகின் பரப்பளவு அதிகமாக இருந்ததாலும், இயற்கைத் தடைகள் இருந்ததாலும் உறவுகள் வளராமல் இருந்திருக்கலாம்; ஆனாலும் பகையில்லை. அதற்கு மாறாக எனது நாடு, உனது நாடு என்று நாட்டுப் பற்றுக்களை வளர்ப்பது நன்றன்று. இந்தக் குறுகிய நாட்டுப் பற்றுக்களின் காரணமாகவே ஒருநாடு இன்னொரு நாட்டோடு மோதுகிறது. நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையே சண்டைகள்! ஒரே சமயத்தைச் சார்ந்த இரண்டு நாட்டில் வாழும் மதத்தலைவர்கள் தத்தம் நாடு வெற்றி பெற வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கும் வேடிக்கையை ஐரோப்பிய வரலாற்றில் பார்க்கின்றோம்.

இந்திய மொழி இலக்கியங்களில்கூட மன்னர் வழி நாட்டுச் சண்டைகள் ஏராளம்.! புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை முதலிய நூல்கள் இத்தகைய சண்டை களைத்தானே வருணிக்கின்றன! உலகு தோன்றிய நாள் தொட்டு நாளதுவரை நாட்டுப்பற்றின் காரணமாகவும், ஆக்கிரமிப்புக்களின் காரணமாகவும் நடைபெற்று வந்துள்ள போர்கள் பலப்பல. மனித சக்தியில் ஒரு கணிசமான விழுக்காடு நேற்றும் போரிலேயே கழிந்திருக்கிறது; இன்றும் கழிந்து வருகிறது; போரில் செலவழிந்த-செலவழிந்து கொண்டிருக்கிற மனித சக்தியை மனித குலத்தின் ஆக்கத் திற்குப் பயன்படுத்தியிருந்தால் இந்த உலகைவிட்டு வறுமையை அறவே அகற்றியிருக்க முடியும். ஆனால் அந்த உயர்ந்த எண்ணம் உலகில் இன்னும் உருப்பெறவில்லை.

வாழப்பிறந்த உயிர்களையும் வாழும் உலகத்தையும் அழிப்பது நாட்டுப்பற்றாகாது. குறுகிய எல்லைக்குட்பட்ட நாட்டின் சிறப்பை எடுத்துக்கூறி,அதில் உணர்வை வளர்த்து நாட்டுப்பற்றை உண்டாக்கிப் பிற நாட்டாரோடு போராடத் தூண்டும் தன்மையனவாக அமைந்துள்ள இலக்கியங்கள் நாட்டு இலக்கியங்களாக-உலக இலக்கியங்களாகத் திகழும் தன்மையுடையனவாகா.