பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மொழி வெறி உண்டாக்காத இலக்கியம்

நாட்டுப்பற்றை அடுத்துத் தோன்றுவது மொழிப் பற்று. மனித குலத்திற்கு மொழி இன்றியமையாதது. மொழித் தோற்றத்திற்குப் பிறகுதான் மனித உலகம் வளர்ந்திருக்கிறது. மொழித்தோற்றத்திற்குப் பிறகு, மொழிகளால் மனித குலம் பெற்றிருக்கும் கொடைகள் பலப்பல. ஒரு மனிதன், இன்னொரு மனிதனைப் புரிந்து கொள்ள மொழியே துணை செய்கிறது. மொழி வழிதான் காதல் சிறக்கிறது; நட்பு நனி வளர்கிறது. பக்தி மலர்கிறது; நாகரிகம் தோன்றுகிறது; பண்பாடு செழிக்கிறது.

மனிதன் பேசத் தொடங்கிய மொழியால் இவ்வளவு பயனைப் பெற்றிருந்தாலும் மொழி, உலக வரலாற்றில் மாறுபாடுகள் வளர்வதற்கும் துணையாய் இருந்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் அது மொழியின் குறையன்று. மொழிப்பற்று மனிதனுக்கு விழிபோல இன்றியமையாதது; உயிரினும் இனியது. ஆயினும் ஒருமொழி எல்லையில் சிந்தனையைச் சிறைப்படுத்துதலும், அயல் மொழியை வெறுத்தலும் ஆகாது. மொழி வேறுபாடுகள் கால எல்லைகளின் மாறுபாட்டாலும், நில எல்லைகளின் தொலைவாலும் தோன்றியவையே! மொழி வேறுபாடு இயற்கையன்று. அதாவது முடிந்தால் மாற்ற முடியாததன்று. மொழிகள் தம்முள் மாறுபட்டாலும் உயர் தத்துவங்கள் மாறுபடுவதில்லை; ஆதலால் 'எனது மொழி, 'உனது மொழி என்ற சண்டை-மனித குலத்திற்குத் தீமையையே தரும். ஒருமொழி எல்லைக்குள் சிறைப்படுத்திக் கொண்டு, சிந்தனையில் வறட்சியடைதல், வளர்ச்சிக்குத் துணை செய்யாது. மொழியில் உயர்வு, தாழ்வு பாராட்டுதலும், இன்ன மொழியில்தான் கடவுளை வணங்க லாம் என்பதும் மனித குலத்தின் ஒருமைப்பாட்டுக்கு