பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை நலம்



109


உணரும்சக்தி ஆமைக்கு இல்லை. ஆமைக்கு மட்டுந்தானா? மனிதர்களிலும் பலர் இப்படித்தான் வாழ்கின்றனர்.

பெரும்பான்மையான மக்கள் காலப்போக்கில் துன்பம் விளைப்பனவற்றையே இன்பமெனக் கருதி வாழ்ந்து ஏமாற்றத்திற்கு ஆளாகின்றனர். இதனைத் திருவள்ளுவர்

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

(355)

என்றார்.

51. ஆன்மாவின் உணவு!

மனிதன் பிறப்பதில்லை; மனிதன் உருவாக்கப்படுகின்றான். இதுவே அறிவியல் உண்மை. மனிதனை உருவாக்குவதில் கல்வி வகிக்கும் பாத்திரம் மிகமிகப் பெரியது. கல்வியின் இலட்சியமே மனிதனை உருவாக்குவதுதான்! அதனால் மனிதனை உருவாக்கும் கல்வியிலும் விழுமியது இல்லை.

மனிதனின் பொறி, புலன்களைப் பயனுடையனவாக்கி வாழ்க்கையை வளர்த்து விளக்கமுறச் செய்வது கல்வியே! மனிதன் அளப்பரிய ஆற்றலுடையவன். மனிதனின் ஆற்றல் கல்வியின் மூலமே இனங்காணப் பெற்றுச் செயலாக்கத்திற்குப் பயன்படு நிலைக்குக் கொணரப் படுகிறது! ஏன் கல்வியே ஆன்மாவின் சிறந்த உணவு.

திருக்குறள் ‘கற்க!' என்று பேசுகிறது. ஆம்! கல்வி கற்பது மனிதர்களின் பழக்கமும் வழக்கமும் ஆகவேண்டும். கற்றல் பலவகை. அவற்றுள் எளிமையானது, முதன்மையானது தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தைக் கூர்ந்து நோக்குவதன் மூலம் கற்பது.

"கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவான்" என்பது பழமொழி. கண்டது=கண்ணால் கண்ட இயற்கைக் காட்சி