பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போகிறதோ தெரியவில்லை. இந்த நிலைமையை நாம் எண்ணிப்பார்க்கின்றபொழுது, மனிதன் பகுத்தறிவில்லாதவனா? அவன் மொழிகளில் உலக இலக்கியங்கள் தோன்றவில்லையா? அதில் புத்தம் புதிய சாத்திரங்கள் தோன்றவில்லையா? அவனுடைய பிரார்த்தனையுலகில் செழுமை படரவில்லையா? எல்லாம் இருந்தும்கூடப் பலர் ‘சிரங்குசொறி பிடித்தவர்கள்போல’ திரும்பத் திரும்பத் தவறுகளைச் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்! எது வளரவில்லை. நம்மைப்புறச் சூழலில் வளர்க்கின்ற சமயம் வளரவில்லை என்று கூற முடியுமா? உலகிலேயே அமெரிக்க நாட்டில்தான் கடந்த பத்தாண்டுகளில் வழிபாட்டில் அதிக நம்பிக்கையுடையவர்கள் பெருகியிருக்கிறார்கள். இந்தப் பத்தாண்டுகளில் அங்கு ஏராளமான மாதாகோவில்கள் தோன்றி யிருக்கின்றன, பைபிளை அதிகமாக ஓதுகிறவர்களை அங்குதான் பார்க்கிறோம். ஆனாலும், அங்கு ஏசுவின் மதம்-கிறித்தவம் கல்லறைக்குப் போய் விட்டது என்பதை மறுக்கமுடியுமா? இந்த உண்மைகளையெல்லாம் நன்றாகத் தெரிந்து கொண்டுதான் திருவள்ளுவர் பேசுகிறார். 'மனித வாழ்க்கையில் அன்பும் அமைதியும் வேண்டும்’ என்றார். அன்பும் அமைதியும் வேண்டுமென்று சொன்னால், உன்னுடைய அறிவுமட்டும் போதாது. நீ எதைக் கேட்கின்றாயோ-எதைச் சார்ந்திருக்கின்றாயோ அந்த அறிவு-மெய்யறிவாக-மெய்ப்பொருளாக இருக்கிறதா என்று பார் என்று சொல்லுகிறார். ‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்கிறார். நாம் வாழுகிற மனித சமுதாயத்தில் எல்லாவகையான ஆதிக்கக் காரர்களும் உண்டு. ஆட்சியில் வீற்றிருப்பவர்கள் மட்டும் ஆதிக்கக்காரர்கள் அல்லர். பொருளாதாரத்தைத் தங்களிடத்தே குவித்து வைத்துக்கொண்டிருப்பவர்கள் மட்டும் ஆதிக்கக்காரர்கள் அல்லர். அறிவுலகத்திலும் ஆதிக்கக் காரர்கள் உண்டு. அவர்கள், மற்றவர்களுக்கு அறிவு