பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உரிமை. இந்தக் கடமை உரிமை உணர்வுகளுக்கிடையே ஈகை, கருணை, இரக்கம் என்ற சொற்கள் ஏன்? இல்லத்தலைவன் தன் இல்லத் தலைவிக்குத் துணி வாங்கிக் கொடுப்பதைக் கடமையாகக் கருதுகிறானே தவிர அதற்கொரு பாராட்டுப் பத்திரமும், வாழ்த்துரையுமா எதிர்பார்க்கிறான்? நிலத்தின் சொந்தக்காரன் அந்நிலத்தைப் பேணிக்காப்பது கடமை. அதுபோல, செல்வம் உடையவர் எஞ்சிய செல்வத்தை இல்லாதவர்க்கு உதவுவது கடமை. இதனை உணர்த்துகிறார் திருவள்ளுவர். இந்த ஒப்புரவுக் கொள்கையை மூன்று சிறப்பு உவமைகள் மூலம்-மூன்று சிறந்த எடுத்துக்காட்டுக்கள் மூலம் தெளிவாக விளக்குகிறார்.

'ஊருணி நீர் நிறைந்தற்றே’ என்று ஒரு குறள். இந்தக் குறட்பா, வள்ளலையும் ‘வள்ளல் தன்மை’ யையும் பாராட்டுவதாகக் கருதிக்கொண்டே இன்னும் பலர் பேசிக்கொண்டு வருகிறார்கள். உரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு வள்ளலையும், வள்ளல் தன்மையையும் பாராட்டுகிற குறளாக இக்குறட்பா எனக்குத் தோன்றவில்லை. ஊருணி இருக்கிறது-ஊரினர் பலர் அதிலே தண்ணீர் எடுத்துக் குடிக்கிறார்கள். நாள்தோறும் அக்குளத்தைப் பயன்படுத்துகிறார்கள். அந்த ஊருணி இந்த ஊருக்கும் உலகுக்கும் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற உணர்வோடு கொடுக்கிறதா? அந்த ஊருணியில் அந்த ஊர்மக்கள் தண்ணீர் எடுக்கவில்லையானால் ஊருணி என்னாகும்? அந்த ஊருணி பாசி பிடித்து, ஊற்றுவளம் கெட்டுப் புழு நெளியும் குட்டையாகி அந்நகரின் நகராட்சி மன்றம் அதைத் துர்த்துவிடத் திட்டம் போடுகிற நிலைமை ஏற்பட்டு விடாதா? அந்த ஊருணி ஊர் மக்களுக்குத் தண்ணீர் கொடுப்பது கொடைபோலத் தோன்றினாலும் அது மறைமுகமாகத் தன்னுடைய ஊற்றுவளத்தை-ஊருணி என்ற பெயரை இவற்றிற்கெல்லாம் மேலாகத் தன் தூய்மையைக் காப்பாற்றிக் கொள்ளுகிறது. அதுபோலவே அறிஞன் கொடுப்பான்.