பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் விண்னும்



137


"ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகுவாம்
பேரறி வாளன் திரு”

என்றார். அறிவு கொஞ்சம் திட்டவட்டமாகக் கணக்குப் போடும். ஒன்றைச் செய்தால் அது எப்படித் திரும்பிவரும் - இதனால் என்ன இலாபம் என்று கணக்குப் போட்டுப் பார்த்துத்தான் பேரறிவாளன் ஒன்றைச் செய்வான். ஆனால், சமுதாயத்தோடு-சமுதாய உணர்ச்சியோடு-அன்போடு-அருளோடு-அற உணர்வோடு கலக்காத வெற்றறிவு எப்படிக் கணக்குப் போட்டுப் பார்க்கும்? பேரறிவாளன், தன்னை நம்பிக் கொண்டு, தனக்காக-தன்னுடைய நலனுக்காகவே கொடுப்பான், குறி எதிர்ப்பைக் கொண்ட இந்தக் கொடையையே திருவள்ளுவர் 'ஊருணியோடு ஒப்பிட்டார்.

மனித உலகம் மேலும் வளர்ச்சியுற வேண்டும். அது தனக்காக-தன்னுடைய நன்மைக்காக அல்லாமல் தன்னை மறந்து கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கு மருந்து மரத்தை உவமையாக-எடுத்துக் காட்டாகக் கொண்டு விளக்குகிறார்.

"பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கட் படின்"

என்றார். நயனுடையான் என்றால் நெஞ்சுடையவன் என்று பொருள். நெஞ்சுடையவனுக்கு மூளை மேலோங்கி நிற்கவில்லை-இதயம் வேலை செய்கிறது. இவன் எந்த இனத்தைச் சேர்ந்தவன்-இவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன் - இவன் எந்த மொழியைப் பேசுபவன் - இவனுக்கு - இவனுடைய ஏழைமைக்குக் கொடுப்போமா? வேண்டாமா? என்றெல்லாம் மூளையால் ஆராய்வதில்லை. இதயம் அவனது ஏழைமையைப் பார்த்து-துன்பத்தைப் பார்த்து உதவ முந்துகிறது.