பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஏழைமையில் அமிழ்ந்து போனதைப் பார்க்கிறோம். தீமையைத் தடுத்து நிறுத்துவதற்குச் சக்தியில்லாமல் அவதியுற்றவர்களைப் பார்க்கிறோம். இவ்வாறு எதைப்பார்த் தாலும் நிலையில்லாதது-நிலையில்லாதது என்று சொல்லி மனிதன் உழைக்கும் சக்தியைப் பெருக்குவதையே விட்டு விட்டான். முயற்சி செய்வதையும் விட்டுவிட்டான். எதிலுமே அவனுக்கு ஒரு வறண்ட மனோபாவம் ஏற்பட்டது. எனவேதான் தஞ்சைப் பெருங் கோயிலையும், தில்லை நடராசர் திருக்கோயிலையும் எழுப்பிய பரம்பரை இன்றைக்கு ஓர் ஓராசிரியர் பள்ளியைக் கட்டக்கூட வேறு யாரையாவது எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நமது வரலாற்றில் ஏற்பட்ட வீழ்ச்சியைத் திருவள்ளுவர் மிக நன்றாகப் புரிந்து கொண்டார். ‘இந்த உலகத்தில் நீ இன்பம் பெற வேண்டும் என்றால்-இறைவனின் திருவருளைப் பெறவேண்டும் என்றால் நீ முதலில் இந்த உலகத்தில் வாழக் கற்றுக்கொள்’ என்றார். இந்த உலகத்தில் வாழ்கிற வாழ்க்கை ஒன்றும் பெரிதல்ல-இங்கு எப்படி வாழ்ந்தாலும் மறு உலகத்தில் இடம் பிடித்து விடலாம் என்ற போலி நம்பிக்கை மக்களிடத்தில் மிகுந்திருந்தது. இந்த உலகில், சேற்றைப் பூசிக்கொண்டு வாழ்ந்தால், மறு உலகத்தில் சந்தனப் பூச்சுக் கிடைக்கும் என்று நம்புகிற அளவிற்குத் தத்துவம் பரவிக்கிடந்தது. இந்த உலகில் பட்டினி கிடந்தால் மறு உலகில் தேவாமிர்தம் சாப்பிடலாம் என்ற நம்பிக்கை வளர்ந்து கிடந்தது. இந்தப் போலி உணர்வுகளின் காரணமாக, பரந்துபட்ட சமுதாயம் காலப்போக்கில் கூனிக்குறுகி, அலுத்துச் சலித்து இளைத்து வறுமைத் துன்பத்திற் சிக்கி அவதிப்படுமே என்று கவலைப்பட்டார் திருவள்ளுவர். எனவே, அவர் 'நீ மறு உலகத்திற்குப் போவதைப்பற்றி இப்போது கவலைப்படாதே! நீ இந்த உலகில் வாழ்வாங்கு வாழு; வீட்டின்பத்தை இறைவனே பார்த்து உனக்குக் கொடுப்பான் என்றார். தவறுதலாக