பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சொல்லும்போது அப்படி யல்ல. மனிதன் என்ன முயற்சி பண்ணினாலும் ஊழ் முன்வந்து நிற்கும். ஆனால், முயற்சியால் அதனை வென்று விடலாம் என்கிறார்.

"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துளுற்று பவர்"

"தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய் வருந்தக் கூலிதரும்"

என்று முயற்சியின் வலிமையை-முயற்சியால் ஊழை வெற்றி காண முடியும் என்ற உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்துகிறார். அப்படியானால் 'ஊழிற் பெருவலியாவுள?' என்று வள்ளுவர் ஏன் குறிப்பிட வேண்டும் என்று கேட்கலாம். 'ஊழை நீ அழித் தொழிக்க வேண்டுமானால் உன்னுடைய ஆற்றல் மிகப் பெரிதாக இருக்க வேண்டும்’ என்ற உணர்வை எழுப்புவதற்காகத்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மாற்றான் படையைப் பெருமைப்படுத்திக் கூறினால் அது தன் படையை இழித்துக் குறைத்துக் கூறியதாக ஆகாது. தன்படை வீரர்கள் திறமையாகப் போர் புரியவேண்டும் என்பதற்காக மாற்றான் படையினைப் பெருமைப்படுத்தித் தன் படை வீரர்களுக்குக் கூறியனுப்புவது இயல்பு-மரபு. அதுபோல, ‘ஊழிற் பெருவலி யாவுள?' என்று திருவள்ளுவர் கேட்டது ஊழைப் பெரிது படுத்துவதற்காக அல்ல-நீ எதிரியை-மாற்றானை ஆற்றலற்றவன்-பலவீனன் என்று கருதிப் போய் தோற்றுவிடாதே-என்று உணர்த்துவதற்காகத் தான். ‘ஊழ் பெருவலிவுடையதாக இருக்கலாம்-அது முன்வந்து நிற்கும்-ஆனாலும், உன் முயற்சி, நாணயம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் நீ அதை வெற்றி பெற முடியும் என்று அவர் மனித சமுதாயத்திற்கு நம்பிக்கை யூட்டுகிறார். வள்ளுவர் காலத்தில், மக்களிடையே அதிகப்படியான ஊழ் நம்பிக்கை பரவிக்கிடந்தது. மனிதன் ஏழையாகப் போவதற்கு ஊழ் காரணம்-மனிதன்