பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விருந்தாலும், அது தவறுதான். எனக்கு என்னுடைய மொழி பெரிதுதான். ஆனாலும் என்னுடைய மொழிப்பற்று மனித குலத்திற்குப் பகையாகப் போகுமானால் அதை அனுமதிக்க முடியுமா? என்னுடைய சமயம் எனக்குப் பெரிதுதான். அந்த உணர்வு தேவையானதுதான். ஆனாலும், என்னுடைய சமயப்பற்று மனித குலத்திற்குப் பகையாக மாறிவிடக்கூடாது. என்னுடைய நாடு எனக்குப் பெரிதுதான். ஆனாலும் என்னுடைய நாட்டுப்பற்று, இன்னொரு நாட்டோடு போய் மோதுவதை அனுமதிக்கலாமா? ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ஆக்கிரமிப்பது-ஒருவன் இன்னொருவனோடு மோதுவது ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்டது.

பொதுவாக, சேரநாட்டில் பிறந்தவன் சேரநாட்டின் பெருமையைத்தான் சிறப்பித்துப் பேசுவான்-பாண்டிய நாட்டில் பிறந்தவன் பாண்டிய நாட்டின் பெருமையைத்தான் சிறப்பித்துப் பேசுவான்-சோழநாட்டில் பிறந்தவன் சோழ நாட்டின் பெருமையைத்தான் சிறப்பித்துப் பேசுவான். இந்தக் கூனிக்குறுகிய-தரித்திர புத்தியைத் திருவள்ளுவர் பார்த்தார். இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று விரும்பினார். எனவே, அவர் தமது திருக்குறளில் உலகம், உலகம், உலகம் என்றே முழங்குகிறார் இன்றைக்கு இருப்பதைப்போல வானொலியும் தொலைபேசியும் இல்லாத காலத்தில் இவ்வளவு அதிகமாக உலகத்தைப்பற்றித் திருவள்ளுவர் பேசியதையும், உலகக் கண்ணோட்டத்தோடு பாடியதையும் நாம் பார்க்கிறோம். கள்ளுண்ணாமை, புலாலுண்ணாமை ஆகியவற்றை ஒழுக்கமென வலியுறுத்தும் வள்ளுவர் அந்த ஒழுக்கங்களையெல்லாம் நீ போற்றாவிட்டாலும் பரவாயில்லை-உலகத்தோடு ஒட்ட ஒழுகல் சிறந்த-பெரிய ஒழுக்கம், அந்தப் பெரிய ஒழுக்கத்தை நீ காப்பாற்று என்கிறார்.

நாம் பல்வேறு நாட்டினரைப் பார்க்கிறோம். அவர்களிடத்து அவர்களுடைய நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும்