பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கடவுளையாவது பாராட்டிப் பேசியிருப்பாரானால் மதக்காழ்ப்பும், மதச் சண்டையும் வந்திருக்கும். ‘நீ எல்லாவற்றிற்கும் அப்பால் இருக்கிற கடவுளை வாழ்த்து’ என்றுதான் திருவள்ளுவர் பேசுகிறார். திருவள்ளுவர் காலத்திற்கு முந்தியும் பிந்தியும் எவ்வளவு சமயச் சண்டைகள்! எவ்வளவு சமயக்காழ்ப்புக்கள்! சமயத்தை-சமய நெறியைக் கடைப்பிடித்தொழுகாதவன் கூட சமயத்தின் பேரால் சண்டைபோடுகிற காலம்! அத்தகைய 'சமயவாதி’யே சமயத்திற்காகப் பரிந்து பேசிப் போராடவும் வந்தான்! காரணம், அன்று அது அவனுக்குத் தொழிலாக இருந்தது. இந்த நிலையைத் திருவள்ளுவர் தெளிவாகப் புரிந்துகொண்டார். எனவே, உலகப்பொதுச் சமயத்தை நோக்கியே அவர் பேசினார்.

திருவள்ளுவப் பெருந்தகை, ‘அறக்கடவுள்’ என்று குறித்தாரே தவிர, சிவனென்றோ, திருமால் என்றோ, முருகன் என்றோ, சக்தி என்றோ பிரித்துச் சொல்லவில்லை. காரணம், மனிதகுல ஒருமைப்பாடே திருவள்ளுவருக்கு இலட்சியமாக இருந்தது. அந்த இலட்சிய உலகை நாம் நோக்கிப் பார்க்கிறபோதுதான், மிகச் சிறந்த உலகப் பொதுச் சமுதாயத்தை-உலக மனித சமுதாயத்தைக் கண்டு பிடிப்பதற் காகத் திருவள்ளுவர் அரிதின் முயன்று இந்நூலைச் செய்தார் என்ற உண்மை நமக்குப் புலப்படுகிறது. அவர் அரிதின் முயன்று அந்நூலைச் செய்த பிறகும்கூட, நமது நாட்டில் சாதி, இன, சமய, மொழி வேறுபாடுகளைப் பெரிதுபடக் காட்டி நாம் சண்டையிட்டுக் கொண்டுதான் வாழ்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது பெரிதும் வேதனையாக இருக்கிறது. நம்முடையதிலே நமக்குப் பற்றிருக்க வேண்டும் -ஆனால் மற்றவர்களுடையதிலே வெறுப்பு இருக்கக்கூடாது. இந்த பொது ஒழுக்கத்தை நாம் வள்ளுவர் வாயிலாகக் கடைப்பிடிக்க வேண்டும்.