பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்ந்து, இந்த வையகத்தில் வாழுகின்ற எல்லா மக்கட்கும் சோறும் துணியும் தருவதன்மூலம் மண்ணகத்தை விண்ணகமாக்கி, இறைவனை மீண்டும் இங்கே கொணர்வோமாக!

6. மானிடச் சந்தையில்

மானிடச் சந்தையில் பல்வேறுவிதமான மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்; கோவலன் இருந்திருக்கிறான்; இராமன் இருந்திருக்கிறான்; இராவணனும் இருந்திருக்கிறான். மானிடச் சந்தையில் இணைத்துக் கட்டப்படாமலேயே மனிதர்கள் கூடிநிற்பார்கள்.

மனிதன் எதையும் எண்ணிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்; அந்த எண்ணத்தின் வழியாக-சிந்தனையின் வழியாக பல்வேறு கேள்விகளை எழுப்ப வேண்டும்; நமது பழந்தமிழர்கள் எதையும் எண்ணித்துணிவார்கள்; துணிந்த பின் எண்ணமாட்டார்கள். அதுமட்டுமல்ல துணிந்தபின் எண்ணுவது இழுக்கு என்றுகூடக் கருதுவார்கள். எனவே, அவர்களது அகத்துறையிலும் புறத்துறையிலும் தகுதி இருந்தது, தரம் இருந்தது. இன்று, எண்ணிச் சிந்திப்பதற்கு அக்கறை குறைந்து விட்டது. கேள்விக்குச் சரியான விடையிறுப்பதென்பதும் அரிதாகிவிட்டது.

தமிழர்களில் பலர் நேற்று நேற்று என்றே கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்; நேற்றைய நிகழ்ச்சிகளைக் கனவு கண்டு கொண்டிருப்பதால் எத்தகைய உருப்படியான பயனும் ஏற்படப் போவதில்லை-நாளை நாளை என்று கனவு கண்டாலாவது இன்றில்லா விட்டாலும் நாளை, நாளை இல்லா விட்டாலும் நாளை மறுநாள் விடிவெள்ளி முளைக்கலாம்.