பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் விண்னும்



173



மனிதன் எண்ணுபவனாக எண்ணித் துணிபவனாக ஆளுபவனாக-ஆளப்படும் நேரத்தில் உறுதியுடையவனாக இருப்பது மானிடச் சந்தைக்கு இன்றியமையாத பண்பாகும்.

'மனிதர்கள் இயற்கையில் மிக நல்லவர்கள்: சமுதாயத்தால் கெடுகிறார்கள்’ என்பது காந்தியடிகளின் கருத்து. மாக்ஸ் வெல்லியன் கருத்து இதற்கு முற்றிலும் மாறானது. 'மனிதன் அயோக்கியனாகப் பிறக்கின்றான்; சமுதாயத்திற்குப் பயந்தே நல்லவனாக வாழ முயற்சிக்கிறான்' என்பது மாக்ஸ் வெல்லியின் சித்தாந்தம்.

'மனிதன் ஒளியுடையவன்; ஒளிபடைத்தவன்; ஒளியுடையவனாக வாழ முடியும். ஆனால், அவன் அறிவை வளர்த்துக் கொள்வதில்லை’ என்கிறார் சாக்ரடீஸ். நீண்ட காலமாக மனிதசமுதாயம் தனது பகுத்தறிவைப் பயன்படுத்தத் தவறிவிட்டது. தந்தையின் அறிவைவிட மகனறிவு தூயதாக இருக்கக்கூடும் என்பதை நம்பவேண்டும். நம்மிலே பலர் யார் சொல்லுகிறார் என்பதைத்தான் பார்ப்போமேயொழிய, என்ன சொல்லுகிறார் என்பதை ஆராய்வதில்லை. எனவேதான்

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”

என்றார் திருவள்ளுவர். ‘பகுத்தறிவால் ஆராய்ந்து பார்' என்றார் சாக்ரடீஸ், ‘ஏன்’ என்று கேட்பது பாவம் என்று கருதிய மானிடச் சந்தையைப் பார்த்து. மனிதன் தன்னைப் பற்றியே எண்ணிச் சிந்தித்து, ‘ஏன்’ என்று கேள்வி கேட்கத் துணிய வேண்டும் என்று கூறினார் சாக்ரடீஸ்.

பொதுவாக, பணத்தோடும் பதவியோடும் தொடர்பு கொண்டவர்களைச் சட்டத்தாலேயே மாற்றமுடியும் என்பது ஒரு சித்தாந்தம். மனிதன் உயர்ந்தவன்; அவனது வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம் உள் உணர்வுதான். இன்று, மானிடச் சந்தைக்கு வருகிறவர்களிற் பலர் தங்கட்குப் பிடித்தமான