பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/193

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் விண்னும்



181


பாரதி தமிழ் நாட்டையே பாராட்டுகிறான். காரணம் திருவள்ளுவரை ஈன்று அவர் வழி உலகு திருக்குறளைப் பெறக் காரணமாக இருந்ததுதான். உலக அரங்கில் ஒரு கவிஞரால் நாடு உலகப் புகழ் பெறுதல் என்பது அருமையிலும் அருமை. திருவள்ளுவர் உலகு புகழ் கவிஞர். இவர் அருளிய திருக்குறள் உலகப் பொதுமறை. அதனாலன்றோ பாரதியார் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து” என்று மனங்குளிரப் பாடுகின்றார். திருவள்ளுவரைப் பெற்றமையால் தமிழ்நாடு பெற்றபுகழ் வான்புகழ். வான்புகழ் என்றால் இலக்கண மரபுப்படி மிகச் சிறந்த புகழ் என்று பொருள் கூறுவர். எனினும், நிலமனைத்தும் வானால் சூழப்பெற்றுள்ளது. வான் புகழ் என்றால், வானகம் பரவியுள்ள நிலவுலகமனைத்திலும் நின்று நிலவும் புகழ் என்றும் கொள்ளலாம். மேலும், வானுலகம் போற்றும் புகழ் என்றும் பொருள் கொள்ளலாம். இத்தகு சிறந்த புகழ் திருக்குறளுக்கு எப்படி வந்தது?

இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, திருக்குறள் தோன்றயது. திருக்குறள் தோன்றிய ஆண்டிலும் அதற்கு முன்பும் உலக மொழிகளில் திருக்குறள் போன்ற சிறந்த நூல் ஒன்றும் தோன்றவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதி, இன, மொழி, சமய வேறுபாடுகளைக் கடந்த ஒரு பொது நூல், காணும் ஆற்றல் தமிழகத்திற்கே இருந்தது. உலகில் மக்களாகப் பிறந்தோர் பேசும் வேறு எம்மொழியிலும் இத்தகையதொரு நூல், திருக்குறள் தோன்றுவதற்கு முன்பு தோன்றியதில்லை. ஏன்? அதற்குப் பின்பும் இதுவரையிலும் கூட திருக்குறளுக்கு இணையான ஒரு நூல் தோன்றவில்லை.

நூல் தோன்றிய காலத்தின் தொன்மைமட்டும் நூலின் சிறப்புக்கு முற்றிலும் காரணமாகமாட்டா. நூல் நுதலும் கருத்துக்களும், சிறப்புடையனவாக இருத்தல் வேண்டும். இரட்டுற மொழிதலும், மயக்க நிலையின் பாற்பட்டனவும்