பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/214

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் ஓர் உலகக் கருத்தைக் கண்டு காட்டினார். இவர்தம் நூலே ஓர் உலகக் கருத்தை மையமாகக் கொண்டு விளங்குகிறது. இவர்தம் ஓருலகக் கருத்து அச்சத்தில் விளைந்ததன்று: அன்பில் விளைந்தது. பெரும்பாலும் நூல்கள் தன் நாடு, தன் மொழி, தன் இனம், தன் சமயம் ஆகியனவற்றைச் சிறப்பித்தே எழுதப்பெறும். ஒரோ வழி தம்முடையதைச் சிறப்பித்தும், மற்றையதை இழித்தும் எழுதப்பெறுவதும் உண்டு. திருக்குறள் இந்தக் குறைகளின்று முழுதும் நீங்கிய நூல், திருக்குறளில் தமிழ் என்ற சொல் இல்லை. தமிழன் என்ற சொல்லும் இல்லை. பெயர் குறிப்பிட்ட காடு, மலை, ஆறு, நாடு ஆகியவை பற்றிய செய்திகளும் இல்லை. எந்தக் கடவுளின் பெயரும் இல்லை. எந்தச் சமயச் சின்னங்களும் இல்லை. ஆதலால், திருக்குறள் இனச் சார்பற்ற நூலாக, நாடும் எல்லையும் கடந்த நூலாக, மனித குலத்தின் பொது நெறி நூலாகத் திகழ்கிறது.

இன்றையத் தேவை மனிதகுல ஒருமைப்பாடு. இதனைச்சமயச் சான்றோர் ஆன்மநேய ஒருமைப்பாடு என்று கூறுவர். இத்தகு ஒருமைப்பாட்டைக் காணுதலும் வளர்த்தலும் அருமையான முயற்சி. ஆயினும் இன்பம் பயக்கும். ஆனால் உண்மையான ஒருமைப்பாட்டைக் காணல் வேண்டும். ஒற்றுமையே ஒருமைப்பாடென மயங்கிவிடுதல் கூடாது. ஒற்றுமை, கட்டாயம், தேவை ஆகியவை கருதியும் தோன்றலாம். கலகம் செய்வதற்கு ஆற்றல் இன்மையின் காரணமாகவும் ஒற்றுமை இருக்கலாம். இது நெடிய பயனைத் தராது. ஒருமைப்பாடு என்பது சிந்தனையினால் உணர்வினால், குறிக்கோளால், வாழ்க்கை அமைப்பால் ஒன்று கலந்து இருப்பதாகும். இத்தகு ஒருமைப்பாட்டை அரசுகளால் தோற்றுவிக்க முடியாது. அறநெறியினாலேயே முடியும். அதனாலன்றோ கார்லைல் என்ற பேராசிரியர்