பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/218

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மனம் கெடுகிறது என்பது பழைய கருத்து. மனம் புறச்சூழ்நிலையாலேயே கெடுகிறது என்பது மார்க்சிய சித்தாந்தம்; அண்மைக்கால விஞ்ஞானக் கருத்து. ஆயினும் புறச்சூழ்நிலையும் சார்பும் மனித மனத்தை உருவாக்கும் காரணங்கள் என்ற கருத்து, பழந்தமிழ்க் கருத்து என்பதை மறந்துவிடுவதற்கில்லை. மனத்திற்குத் தூய்மைக்கேடு அகநிலையிலிருந்து வந்தாலும் சரி, புற நிலையிலிருந்து வந்தாலும் சரி! வந்த வழியைப் பற்றி இப்பொழுது என்ன கவலை? இரண்டு நிலைகளையுமே இப்பொழுது ஆய்வு செய்யலாம். மனம், ஒரு பொருளைச் சென்று பற்றுகிறது. அல்லது ஒரு நிகழ்வில் தோய்ந்து ஈடுபடுகிறது. அப்பொழுது மனத்தின் பங்கு ஆன்மாவின் அறியாமை என்கிற தாக்கத்தின் காரணமாக விருப்பு நிலையையோ வெறுப்பு நிலையையோ அடைகிறது. மனம், ஒன்றை விருப்புணர்வோடு அணுகினாலும் சரி, வெறுப்புணர்வோடு அணுகினாலும் சரி, நடுநிலை பிறழ்கிறது! விருப்புணர்வு அடைய வேண்டுமென்ற ஆர்வத்தையும், வெறுப்புணர்வு ஒதுக்க வேண்டுமென்ற உணர்வையும், உருவாக்கும். அவ்வழி அழுக்காறு, அவா, வெஃகல், வெகுளி, இன்னாச்சொல், பகை ஆகிய இயல்புகள் மனத்தினிடைத் தங்கித் தாம் முன்னியது முடிக்க ஆன்மாவை இழுத்துக் கொண்டு செல்லும். ஆதலால், மனத் தூய்மைக் கேட்டுக்கு முதல் நிலையாக அமைவது ஆன்மாவின் அறியாமை என்பதில் ஐயமில்லை. மனம் சென்று பற்றுகிற புற உலகில் வேற்றுமைகள் மிகுதியாக இல்லாமல், உடையார் - இல்லாதார் என்ற வேற்றுமையில்லாமல் எல்லாருக்கும் எல்லாம் எளிதில் கிடைக்கக் கூடிய பொதுமை நிலையுடைய சமுதாய அமைப்பு இருந்தால் ஆன்மாவிற்கு அல்லது மனத்திற்கு விருப்புகளும் வெறுப்புகளும் உருவாவதற்குரிய வாயில்கள் அடிபட்டுப் போகின்றன. அத்தோடு, புறத்தே பற்றுக் கோடாகக் கொள்ளும் நட்பு, சுற்றம் முதலியன நல்லன எண்ணி, நல்லன.