பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/221

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனை மலர்கள்



209


யில் அமர்த்தியபிறகு அமர்தல், அவர்தம் கருத்து இன்னதென்று அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் வணங்கியவாயினராகக் கேட்டல், உடன்படாதவற்றைச் சொன்னாலும் உவப்புடன் கேட்டல், மற்றவர்கள் உவப்பக் கருத்தைத் தெரிவித்தல் ஆகியன பணிவிற்குறிய சில அடையாளங்கள். எங்கே பண்பில் முதிர்ச்சியிருக்கிறதோ அங்கே பணிவு இருக்கும். எங்கே பழுத்த மனம் இருக்கிறதோ அங்கே பணிவு இருக்கும். ஆழ்கடலில்தானே அழகான முத்து! கட்டடத்தின் வலிமை அடிப்படைக் கல்லால்தானே!

எங்கே பணிவு இருக்கிறதோ அங்கே நிச்சயம் இன்சொல் இருக்கும். கொள்கை உயர்ந்ததாக இருந்தால் போதாது! அதை மற்றவர் ஏற்றுக்கொள்ளும் வகையில் எடுத்துக்கூறும் ஆற்றல் வேண்டும். பணிவுக்கு இன்சொல் அரண். இன்சொல்லுக்குப் பணிவு அரண். இரண்டும் இரட்டைப் பண்புகள்! ஆனால் வாழ்க்கையைச் சிறப்பிப் பதில் ஒருமைநலம் சார்ந்த பண்புகள்! இவ்விரண்டு பண்புகளும் ஒருவர் வாழ்க்கைக்கு அழகூட்டுவன; மதிப்பூட்டுவன; உயர்வூட்டுவன. இவ்விரு பண்புகளையும் அணியெனப் பெற முயலவேண்டும், இவையே புகழ்மிக்க வாழ்க்கைக்கு அணிகள்! மற்றபடி கவர்ச்சியான ஆடைகள், தங்க அணிகலன்கள், வண்ணப்பூச்சுகள், வாசனைப்பூச்சுகள் முதலியனவற்றை அணியெனக் கருதி ஏமாறுதல் வேண்டா. அவற்றுக்காகப் பெரும்பொருளை இழக்கவேண்டா. அவற்றை மதிப்பார் யார்? பிணத்திற்குக் கூடப் பொன்னணி பூட்டப்படுவது உண்டு. பயன் என்ன? உயிர்ப்புள்ள, பொருளுள்ள, புகழ்மிக்க வாழ்க்கைக்கு அணி, பணிவும் இன்சொல்லுமேயாம். மக்களாட்சி நடைமுறை வாழ்க்கைக்குப் பணிவும் இன்சொல்லும் இன்றியமையாப் பண்புகள்! இந்த அணிகளை அணிவோமாக! காசின்றி எளிதில் முயன்று பெறக்கூடிய இந்த அணிகளை எவரும்

தி.15.