பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12

முதலியன வழங்கிப் பலரையும் பேணி வளர்த்துப் பாதுகாக்காமல் சாகடித்தலும் கொலைக் குற்றமே என்பதனை உணர்த்தவே இந்தக் குறள் கொல்லாமை அதிகாரத்தில் அமைந்திருக்கின்றது என்ற அரிய விளக்கம் அருமையானது.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்

என்னும் குறளுக்கு அறிவியல் பார்வையில் தருகின்ற விளக்கம் அற்புதமானது. ஊர் நலம் போற்றுபவனின் விளைநிலம் உரிமையால் தனி மனிதனுடையதாக இருப்பினும் நிலம் பேணப்படுவதில் பொதுவுடைமையாகப் போற்றிப் பேணப்படும். உரிமையாளர் விவசாயம் செய்ய மறந்திருந்தால்கூட ஊரார் அவருக்காக வேளாண்மை செய்து விளைச்சலை வீடு கொண்டுவந்து சேர்ப்பர் என்ற விளக்கம் பாராட்டுக்குரியது.

அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானொ(டு) ஊர்ந்தான் இடை

என்பதற்கு, சமய ஞானியாய் இருந்துகொண்டு கூறும் விளக்கம் அடிகள் பெருமான் சமய உலகின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புரட்சித்துறவி என்பதனைப் பறைசாற்றுகின்றது.

மரபு வழிப்பட்ட சமயவாதிகள் வறுமைக்கும் ஏழ்மைக்கும் காரணமான பழியை, பரம்பொருள் மீதும் விதி - ஊழின் மீதும் போட்டுத் தப்பித்துக் கொள்ளும் பொழுது, ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்' என்று வாழ்க்கை வழித்தடத்தில் உரை கூறிய வள்ளல் பெருமான்தாம் நம் அடிகள் பெருந்தகை!

அறிவு என்பது செய்திகளின் தொகுப்பு அல்ல! நூல்களின் இருப்பிடம் அல்ல. கற்றதைத் திரும்ப, கூறியது கூறும் கிளிப்பிள்ளை மொழி அல்ல! துன்ப நீக்கத்திற்குரிய மருந்து! நேற்றையத் துன்பத்தை இன்றைய இன்பமாக மாற்ற உதவும் கருவிதாம் அறிவு என்ற விளக்கம் புதுமையானது; உலகம் முழுமைக்கும் பொதுமையானது.