பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/248

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இயல்பறிந்து அதனுள் விழாமல்-வீழ்பவர்களையும் காக்கப் பணிகள் செய்தலேயாகும்.

திருவள்ளுவர் துறவற இயலில் ‘தவம்’ என்றஅதிகாரத்தில்

"தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றெல்லாம்
அவம்செய்வார் ஆசையுட் பட்டு"

என்று குறிப்பிடுகின்றார். இந்தத் திருக்குறளுக்கு உரை கண்டவர்கள், வாழ்க்கையைத் துறந்து தவம் செய்கின்றவர்கள் தம்முடைய காரியத்தைச் செய்கிறார்கள் என்பது போலப் பொருள் காண்கிறார்கள். அங்ஙணம் செய்யாதவர்கள் ஆசையுட்பட்டு பாவம் செய்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். இந்தத் திருக்குறளுக்கு இன்னும் சற்று விரிந்த நிலையில் பொருள் காண்பது நல்லது ‘தம்கருமம் செய்வார் தவம் செய்வார்’ என்று கொண்டு கூட்டிப் பொருள் காண்பது சிறப்பாக இருக்கும், மனித வாழ்வியலில் அவர்களுக்கென்று கடமைகள் அமைந்துள்ளன. அவர்களும் அவரவர் கடமைகளை உணர்ந்து செய்யாமையினால் தம்மையும் கெடுத்துக் கொள்ளுகிறார்கள். அவர்களோடு தொடர்புடையதாக இருக்கிற சமூகத்திற்கும், கேடு செய்கிறார்கள். இதன் விளைவாகச் சமூகச் சிக்கல்கள் பெருகி, அழுக்காறு அவா வெகுளி போன்ற இழி குணங்கள் பெருகி வளர்ந்து மனித சமுதாயத்தை அலைக்கழிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாகக் கடமைகளைச் செய்வதன் மூலமே உயிர்களைப் பரிணாம வளர்ச்சியில் ஈடுபடுத்தி தகுதிப் படுத்தி ஆட்கொண்டருளும் இறைவனுடைய திருவுள்ளத்திற்கும் மாறாக வாழ்ந்து பாவத்தை விளைவித்துக் கொள்ளுகிறார்கள். ஆதலால், தமக்குரிய கடமைகளைச் செய்தலையே திருவள்ளுவர் ‘தவம்’ என்று கருதுகின்றார். இல்லறத்தாராக இருப்பாராயின் மனித சமுதாயத்தையே தழுவி, அவர்கள். நன்நெறி நின்று ஒழுகி நல்லின்பத்தோடு