பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/253

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழமுது



241


பொருளைக் குறைப்பர். அதுபோல ஒருவர் பெற்றிருக்கும் பொருளை அல்லது செல்வத்தை அவருடைய உழைப்பாற்றலோடு எண்ணி எடையிட்டுப் பார்க்கும் பொழுது அவர் உழைப்பும் ஆற்றலும் அவர் பெற்ற பொருளும் சமநிலையில் இருக்க வேண்டும். அங்ஙனமின்றி நியாயமில்லாத ஒன்றை நியாயமென்று சொல்லி, வளைந்த கோலைச் செங்கோல் என்று செப்பி, மற்றவர் பொருளை வஞ்சித்தெடுத்த செல்வம் தாழ்வுடைச் செல்வமாகும். தாழ்விலாச் செல்வர் என்று வள்ளுவம் வகுத்ததே, மார்க்சீய சிந்தனையினுடைய தொடக்க காலமாகும்.

வள்ளுவம், மார்க்சீயத்திற்கு முன்னே தோன்றியது. வள்ளுவம் தமிழகப் பழமையில் பூத்த புதுமைநெறி; பொதுமை நெறி. வள்ளுவத்தின் வழி பொதுமை மலருமானால் நம்முடைய மரபுகள் தடம்புரளா, அங்ஙனம் பொதுமை மலராது போனால் வரலாறு எந்தத் திசையில் திரும்பும் என்று இப்போதைக்குக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. வள்ளுவம் வையகத்தின் வாழ்க்கையாக மலரப் பணி செய்வதே இன்று நமது கடமையாகும். தலையாயப் பணியாகும்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
    வான்புகழ் கொண்ட தமிழ்நாடு...நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி
    ஆரம்படைத்த தமிழ்நாடு

- பாரதியார்
5.வள்ளுவத்தின் வழி வாழ்க்கையை இயக்குக!

தமிழ் தழீஇய தமிழர் வாக்கை

தமிழ், ஒரு வளர்ந்த மொழி. இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொழியின் சிறப்புக்குரிய

தி.17.