பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/255

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழமுது



243


சமூக அமைப்பே உருவாகாமல் போய்விட்டது. சமூகத்தில் கிடைக்கக் கூடிய பல்வேறு ஆற்றல்கள் பயன்படுத்தப் பெறாமல் வறிதே பாழாகின்றன. இந்த "நான்” இன்றைய தமிழகத்தில் கம்பீரமாக நடைபோடுகிறது. "நான்" என்ற நிலையை பராமரிக்கவே கட்சிகள் தோன்றுகின்றன. ஏன், நமது சமயத் தலைவர்களையும் கூட இந்த "நான்” விட்ட பாடில்லை, "நான்" உணர்வு மிஞ்சியதால் விளம்பர வாடை வீசுகிறது. நாட்டில் பல தமிழச்சிகள் ஒற்றை சேலையுடன் வாழ்கிறார்களே! அதுவும் கூட பலருக்கு மானம் மறைக்க முடியாத நிலை! ஆயினும் நமது நாட்டுச் சுவர்கள் நாள்தோறும் புதிய வண்ணச் சேலைகளை உடுத்திக் கொண்டுள்ள பொலிவைப் பார்க்கவேண்டுமே! ஆம்; இன்றைய சுவரொட்டிகள், சுவரொட்டிகள் அல்ல! இவை; சேலைகளை விஞ்சிவிட்டன. பாடப்புத்தகத்தில் இளைத்த எழுத்துக்கள், சுவரொட்டிகளில் உப்பி ஊரைப் பார்த்துச் சிரிக்கின்றன. என்னைப் போல் உப்பலாக நீங்கள் இல்லையே! இளைத்திருக்கிறீர்களே! என்று! இந்தக் கேவலம் "நான்” என்ற அகங்காரத்தால் நடைபெறுகிறது.

வையத்துள் வாழ்வு சிறக்க!

"எனது” என்பது மனித நாகரிகத்தின் அடித்தளத்தையே கெடுத்துக் குட்டிச் சுவராக்கியுள்ளது. "எனது” என்ற சொல்லுக்கு மூலமாக உள்ள தனிஉடைமைக்குணம் செழித்து வளர்ந்துள்ளது. இன்று கணவன்-மனைவியிடையே கூடக் குடும்பம் உருவாகாமல் தனி உடைமை ஆசை கெடுத்துவிட்டது; நண்பர்கள் உருவாகாமல் செய்து விட்டது. ஏன் கையூட்டுகள், வரதட்சணைக் கொடுமைகள் ஆகிய கொடிய தீமைகளைப் பெற்றதே தனி உடைமையைச் சார்ந்த கொடுமைதானே! ஆதலால், "நான்” “எனது” என்ற சொற்களுக்குரிய தீய குணங்கள் மாறாத வரையில் தமிழ்ப்பண்பு வளராது; தமிழ் நாகரிகம் தழைக்காது; சமய