பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/261

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழமுது



249


இவற்றின் மீது காட்டும் ஆர்வம் அளவுக்குக் கட்டுப்பட்ட தாக இருக்கவேண்டும். கூவலாமை, குரை கடலாமையைக் கேட்ட கதை போல் ஆகிவிடக்கூடாது. எந்த ஒன்றும் வாழ்வுக்குரிய சாதனமேயாம். சாதனங்களையே சாத்தியங்கள் என்று நம்புவதும் அதற்காகவே வாழ்வதும் அறிவுடைமையாகாது, ஆதலால் நாட்டுப்பற்று வேண்டும். ஆனால் வெறி கூடாது. அதேபோழ்து நாட்டிற்கும் நாட்டிற்குமிடையே உள்ள எல்லைகளை எடுத்துவிட்டு உலகப் பேரரசு காணும் விழைவு வேண்டும்.

சாதிகளின் பெயரால், மதங்களின் பெயரால் இன்று எங்கும் புன்மை வளர்க்கப் பெறுகிறது. ஏன், ஓரணிக் குள்ளேயே பல அணிகள் உள்ளன. அதனாலேயே திருவள்ளுவர், மதங்கள் பற்றி பேசவில்லை; யாதொரு அதிகாரமும் இயற்ற வில்லை, திருக்குறள் நாடு, மொழி, மதம் முதலியன பற்றி யாதொன்றையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. திருக்குறள் பொது நூல்; ஒருமை நூல்; திருக்குறள் நெறி, உலக நெறி; பொது நெறி.

தன்னலம் விலங்கின் தன்மையது. ஒரு சரக்குப் பேருந்து சாலையில் வரும்பொழுது தாழான ஒரு பன்றிகூடத் தற்காத்துக் கொள்ள ஒடி ஒளியும். ஆனால் மற்றப் பன்றிகளைப் பாதுகாக்கும் உணர்வு அந்தப் பன்றிக்கு இருக்காது. மனிதனும் தன்னலம் சார்ந்தவனாகவே வாழ்கின்றான். தன்னலம் செறிந்த வாழ்வு, உலகந்தழீ இயதுமல்ல; ஒட்பமும் அல்ல, இந்த உலக இயக்கத்தின் நடைமுறைகளைக் கூர்ந்து கவனித்தால் இந்த உலகம் பொதுமையில் வளர்கிறது. வாழ்கிறது. உலக மாந்தர் இனம் தோன்றவேண்டும். உலகப் பேரரசு தோன்ற வேண்டும்.

இத்தகு பொது நெறி தோன்ற மானுடம் சில நெறி முறைகளைப் பின்பற்றவேண்டும். முதலாவது, பல மொழிகளைக் கற்கவேண்டும். மொழிகள் உறவுகளின் கதவுகளைச்