பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/266

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காரணமாக வருவது துன்பம். அறிவு அற்றம் காக்கும் கருவி என்று வள்ளுவர் வழி கூறுகிறது. அறிவினாலன்றி வாழ்க்கை முழுமையாவதில்லை. பயனுடையதாகவும் அமைவதில்லை; பண்பாடுடையதாகவும் அமைவதில்லை.

இனிய தமிழ்ச் செல்வ, அறிவுக்கு வாயில் நல்ல நூல்களைக் கற்றல். கற்றல் நாள்தோறும் செய்ய வேண்டிய கடமை. கசடறக் கற்க வேண்டும். தலைமுறை தலைமுறையாக நாம் சுமந்து வந்திருக்கிற மூடநம்பிக்கைகள் என்ற கட்டுகள் ஒன்றா? இரண்டா? தலைமுறை மரபு நம்பிக்கைகள் அறிவுக்குப் பகை. அதனால் வழிவழி வந்த சில உயர்ந்த மரபுகளை இழந்துவிட வேண்டும் என்பது அவசியமில்லை. அந்தப்பழைமைகள் கூட காலத்திற்கேற்பப் புத்துருவம் பெறவேண்டும் வளர்ந்து வரும் புதுமையுடன் அடையாளமின்றிக் கலக்க வேண்டும். சமுதாய வாழ்க்கையில் பழைமை, புதுமை என்ற பிரிவினை கூடாது. எந்த ஒரு பழைமையும் பின்னைப் புதுமையை ஏற்றுக் கொள்ளத் தவறிவிட்டால் பழைமை மலடாகிவிடும். அது போலவே, வளர்ந்துவரும் புதுமை, பழைமை, உணவை எடுத்துக் கொள்ள மறுத்தாலும் புதுமை ஊட்டமில்லாத சவலையாகிவிடும். இனிய தமிழ்ச் செல்வ, "முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே" என்ற திருவாசக அடிகளை நினைந்துபார்! இன்று உலகில் வளர்ந்த நாடுகளில் சப்பானும் ஒன்று. சப்பானியர்களின் வளர்ச்சி வியப்பைத் தரக்கூடியது. அத்ற்குக் காரணம் சப்பானியர்கள் பழைமைக்கும் புதுமைக்கும் சிறந்த இணைப்பை உண்டாக்கி வாழ்க்கைக்குப் பயன்படுத்துகின்றனர். அதனால் அந்த நாடு முன்னேறியிருக்கிறது. நம்முடைய நாட்டிலோ பழைமை புத்துருக் கொள்ள மறுக்கிறது. இளமையை ஏற்க மறுக்கிறது. பழைமை கிழடுதட்டிப்போய் பிரேத ஊர்வலமாக வந்து கொண்டிருக்கிறது. புதுமை என்ற பெயரில் சிலசிந்தனைகள்