பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/270

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பார்த்திருக்கிறாய் அல்லவா? அது ஏன்? அது அழகு பார்த்துக் கொள்ளும் கண்ணாடியன்று; வண்டிக்குப் பின் பகுதியில் என்ன நிகழ்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவேயாம். அதுவும் ஒரளவு தெரிந்து கொள்ளத்தான்! அவ்வாறு தெரிந்து கொள்வதுங் கூட முன்னேறிச் செல்லும் பயணத்திற்கு யாதொரு இடையூறும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்வதற்கேயாம். அந்த அளவுக்குமேல் பின் நோக்கிப் பார்த்தில் கூடாது. அதே வலவர் முன்னால் அவர் முன்னேறிச் செல்ல வேண்டிய எதிர்த்திசையைக் காட்ட அல்லது தெரிந்து கொள்ளப் பெரிய கண்ணாடி பொருத்தப்பட்டிருப்பதையும் பார்த்திருப்பாய்! இனிய அன்ப, போதும் போதும் பழம்பெருமை பேசியது! இனி என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய்! அஃதே அறிவுடைமைக்கு அழகு! அஃதே ஆவதறியும் அறிவு!

இன்ப அன்பு
அடிகளர்
4. உழைப்பாம் வேள்வி

இனிய தமிழ்ச் செல்வ!

"அறிவுடையார் ஆவதறிவார்” என்ற திருக்குறள் சிந்தனை வழி வாழ்க்கைப் பயணம் நடைபெறுதல் வேண்டும். இத்தகு வாழ்க்கையின் உயிர்ப்பாக இருப்பது உழைப்பு, உழைப்புடைய வாழ்க்கையே பயனுடைய வாழ்க்கை. உழைப்பை வள்ளுவம் ஆள்வினை என்று பாராட்டும். உழைப்பும் கூட அறிவறிந்ததாக இருத்தல் வேண்டும். "அறிவறிந்த ஆள்வினை இன்மைபழி” என்பது திருக்குறள். ஆம்! அறிவியல் சார்ந்த உழைப்பால் காலம் மிஞ்சும்; உழைக்கும் ஆற்றல் மிஞ்சும். குறைந்த நேரத்தில் குறைந்த ஆற்றலில் குறைந்த மூலதனத்தில் அற்புதமான படைப்புக்களைச் செய்யத் துணை செய்வது அறிவறிந்த ஆள்வினை.