பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/271

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



259



இனிய தமிழ்ச் செல்வ, உழைப்பில் வாராத உறுதிகள் உலகத்தில் இல்லை! இயற்கை, மானுடத்திற்கு வழங்கிய கொடை. அறிவுப்புலனும் உழைப்பாற்றலும், உழைப்புக் கருவிகளுமேயாகும். உழைப்பவர்க்கே வாழ உரிமை உண்டு. இஃது அறநெறிக் கொள்கை இனிய தமிழ்ச் செல்வ! ஆனால், நமது நாட்டில் உழைக்காமலும் வாழலாம். இந்த நாட்டில் தான் பிறர் பங்கைத் திருடி வாழும் வாழ்க்கை அனுமதிக்கப் பெற்றுள்ளது. பிறர் பங்கைத் திருடும் வாழ்க்கை-சுரண்டும் வாழ்க்கை குற்றமுடைய வாழ்க்கை; பழிசுமந்த வாழ்க்கை. அதனால் உழைப்புச் சார்ந்த வாழ்க்கையே திருக்குறள் வாழ்க்கை.

உழைப்பு என்பது பொருள் நிறைந்தது; வளம் சார்ந்தது. ஒரு பொருளின் மதிப்பை உயர்த்துதல்-பயனற்றவைகளைப் பயன்பாடுடையனவாகச் செய்தல் ஆகியன உழைப்பின் பயன். இனிய தமிழ்ச் செல்வ, நமது நாட்டில் உழைப்பு என்பதும் பொய்ம்மை தோற்றம் பெற்று வருகிறது. இனிய தமிழ்ச் செல்வ, கண்களை அகல விரித்துப் பார்ப்பதன் பொருள் என்ன? நமது நாட்டில் உடலுழைப்பாளிகள் இந்தத் தவற்றை இன்னும் செய்யவில்லை! மூளை உழைப்பாளிகள் இந்தத் தவற்றை வெளிப்படையாகவே செய்கின்றனர். இனிய தமிழ்ச் செல்வ! நல்வாழ்க்கைக்கு முதலாக நிலம், வீடு, மனை, அணிகலன்கள் முதலிய பொருள்கள் தேவையென்று எண்ணி ஏங்கக் கூடாது. இவையின்மை ஒரு பொருட்டல்ல. அறிவறிந்த ஆள்வினை மட்டும் இருந்தால் போதும்! எல்லாவற்றையும் படைக்கலாம்! நுகருமாறு நுகரலாம்! வாழ்வாங்கு வாழலாம்!

இனிய தமிழ்ச் செல்வ, அறிவறிந்த ஆள்வினையே வாழ்க்கையின் தேவை! இவையிரண்டும் நம்மிடம் உள்ளன. வேண்டிய அளவு தூண்டி வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்! அறிவறிந்த ஆள்வினையைப் போற்று! உடன் கிடைக்கும் பணியில் அமர்க! ஏதாவது ஒரு பணியினைத் தொடங்கு! பின் வாழ்க்கை தொடரும்!