பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/278

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கூடாது என்று தடை செய்வது மனித இயலுக்கு முரணானது. இந்தியின் ஆதிபத்தியத்தை எதிர்ப்பது வேறு; இந்தியை எதிர்ப்பது வேறு.

இனிய செல்வ, இன்று நாம் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி, இந்தியாவின் அலுவல் மொழியாக இருப்பதை எதிர்க்கவில்லை. நாம் எதிர்ப்பதெல்லாம் இந்தி படிப்பதையே! ஆம்! "இந்தியைத் திணிக்காதே!” என்பது நமது கோரிக்கை! அவர்களின் வழக்கமான விடை, "இந்தியைத் திணிக்கமாட்டோம்” என்பதுவேயாம். இந்தி, இந்தியாவின் அலுவல் மொழியாக இருக்க ஒத்துக் கொண்ட பிறகு, கற்கப் பெற வேண்டிய அவசியத்தை உணராது போனால் நடுவண் அரசில் நாம் பெறக்கூடிய பங்கு குறைந்து போகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? இனிய செல்வ, அது மட்டுமல்ல! அமரர் நேரு பெருமகனாருடைய உறுதி மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்பது நமது கோரிக்கை! அமரர் நேருவின் உறுதி மொழி என்ன? "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பி ஏற்கும் வரையில் ஆங்கிலம்-இணை ஆட்சி மொழியாக இருக்கும்” என்பதேயாகும். இனிய செல்வ, நேரு மகனாரின் உறுதி மொழியை நன்றாகப் படி! சிந்தனை செய்! “இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பி ஏற்கும் வரையில் ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக இருக்கும்" என்பதில் உள்ள "விரும்பி ஏற்கும் வரை" - என்ற சொற்கள் உணர்த்தும் பொருள் என்ன? இந்தி பேசாத மாநில மக்கள் இந்தியை விரும்பிக் கற்க வேண்டும் என்பது பெறப்படுகிறது. விரும்புகிற காலம் தான் முடிவு செய்யப் பெறவில்லை! விரும்பி ஏற்கும் காலத்தை முடிவு செய்யும் பொறுப்பு, இந்தி பேசாத மாநில மக்களிடம் விடப் பெற்றது. இதுவே உண்மை. இந்தியை என்றாவது ஒரு நாள் விரும்பி ஏற்க வேண்டும் என்ற நியதியை ஏற்றுக் கொண்ட பிறகு கற்க மறுப்பதில் என்ன பொருள் இருக்கிறது? அல்லது கற்கும் காலத்தைத் தள்ளிப் போடுவதில் என்ன பயன் விளையப்போகிறது?