பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/287

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



275


என்று கூறுகிறது. "நோய்க்கு மருத்துவம் செய்வதை விட நோயின் முதலை-நோயின் காரணத்தை மாற்று!” என்பதே திருக்குறள் கொள்கை. இன்று தமிழினம் வளராததற்கு-தமிழ் வளராததற்குக் காரணம் ஆங்கிலம் பயிற்று மொழியாக நீடித்தலேயாம். நமது வீட்டில், நமது பல்கலைக் கழகங்களின் வளாகங்களில், நமது தமிழ் நாட்டில் எந்த மொழி ஆட்சி செய்ய வேண்டும் என்பதில் அக்கறை தோன்ற வேண்டாமா? ஆங்கில மொழியின்பால் ஈடுபாடு வளர்ந்து வருகிறது. இதற்குக் காரணம் ஆங்கிலத்தை அனைத்துக் கொண்டதுதான்! உலக மாந்தரொடு தொடர்பு கொள்ள ஆங்கிலம் வேண்டாமா என்று கேட்பர். நமது நாட்டு மாந்தரொடு தொடர்பு கொள்ள ஒருமொழி வேண்டாமா? கூடாதா? இனிய செல்வ, ஆங்கிலத்தின் மூலம் உலகத் தொடர்பு என்பது இன்று சாத்தியமில்லை! உலக நாடுகள் அனைத்திலும் அந்தந்த நாட்டு மொழிகளே பயிற்று மொழிகள்! ஆட்சி மொழிகள்! ஆதலால் ஆங்கிலம் உலக மொழியல்ல! ஆனால் எல்லா நாடுகளிலும் ஆங்கிலம் ஒரு மொழியாகப் பயிலப்பெறுகிறது. அவ்வளவுதான்! ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு சோவியத்தில், ஜப்பானில் பயணம் செய்தல் இயலாது. இந்தியாவிலும் இயலாது. ஆதலால் ஒரு மனிதன், உலக மனிதனுடன் தொடர்பு கொள்ளவேண்டின் உலக மனிதனாக உயர வேண்டும் எனில் பல மொழிகள் கற்க வேண்டும். முயன்றால் கற்கவும் இயலும்.

இனிய செல்வ, இந்தி இந்தியாவின் அலுவல் மொழி என்றாலும் தேசிய மொழிகளின் ஆர்வங்களுக்கு ஏற்ப நாட்டு மொழிகளை, தேசிய மொழிகளை இந்திய அலுவல்களில் வேண்டிய அளவுக்குப் பயன்படுத்துதல் வேண்டும் என்ற நிலை ஏற்பு செய்யப் பெற்றுள்ளது. இந்த முடிவின்படி மைய அரசு அலுவலகங்கள் மாநில மக்களுடன் தொடர்புகொள்ள மாநில மொழிகளையே பயன்படுத்த வேண்டும் என்பது நடைமுறை! இனிய செல்வ, மிகச் சிறந்த ஏற்பு, மைய அரசின் பணிகளுக்குரிய தேர்வுகளை அவரவர் தாய்