பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/294

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உயர்வு மனப்பான்மை இயக்குகிறது; ஆனால், இயல்பாக உயர்வு நலத்திற்குரிய எந்தத் தகுதியும் இல்லை. ஆதலால் தாழ்வு மனப்பான்மை எதிர் விளைவை உருவாக்கும் பொய்யான உயர்வு மனப்பான்மையாக உருக் கொள்கிறது. இது ஒரு முக்கிய காரணம். அடுத்து செல்வ, அப்பட்டமான தற்சார்பான வாழ்க்கைமுறை. அதாவது சுயநலம். மேலும் சில சமயங்களில் பயந்தாங்கொள்ளித் தனங்கள், தைரியம் என்ற ஆடையைக் கட்டிக் கொண்டு பொய்யாட்டம் போடும். இத்தகு ஆட்டங்கள் பயனற்றவை.

இன்று நம்முடைய நாட்டை வருத்தும் துன்பங்களுள் பெரியது பல்வகைப்பட்ட குழுக்கள் அமைந்திருப்பதே. இத்தகு குழு மனப்பான்மையுடைய முரண்பட்ட சக்திகள் நாட்டின் அனைத்து அமைப்புகளிலும் உள்ளன. இந்திய நாட்டை ஆளும் வாய்ப்பைப் பெற்றுள்ள பேராயக் கட்சியாகிய காங்கிரஸ் (இ) கட்சியில் உள்ள குழு உக்கள் எண்ணில் அடங்காதவை. அதுபோலவே தான் மற்ற கட்சிகளிடத்திலும் அமைந்து கிடக்கின்றன. ஏன்? இனிய செல்வ, அண்மையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் உடைந்து விடும் நிலைக்கு வந்துவிட்டது என்ற செய்தியைப் படித்தாய் அல்லவா? ஆம் செல்வ! கடந்த அரை நூற்றாண்டுக்குள்ளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முற்றாக உடைந்து விட்டது. இப்போது ஏற்படும் பிரிவு நான்காவது. விஞ்ஞான பூர்வமாகச் சிந்திக்க வேண்டிய கடமைப்பாடுடைய கட்சிகள் கூட உடைபடுகின்றன. இதிலிருந்து என்ன தெரிகிறது? நாம் ஒவ்வொருவரும் கற்கும் கல்வியை விட - அறிவை விடப் பாரம்பரியம் அதிகச் செல்வாக்குடையதாக விளங்குகிறது என்பதுதானே! இனிய செல்வ, குழூஉ மனப்பான்மை கூடாது. கருத்து மாற்றங்கள் மனம்விட்டு விவாதிக்கப் பெற்று ஏற்றுக் கொள்ளப் பெறுதல் வேண்டும். கருத்து மாற்றங்கள் ஏற்படவில்லையா? அதனால் என்ன? குடியா முழுகிவிடப் போகிறது? காத்திருக்கலாமே! இப்போது எல்லாம் இத்தகு பொறுமை இல்லை. கருத்து மாற்றங்களுடையோர்