பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/298

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மறத்தல் கூடாது. வாழ்விலும் தாழ்விலும் ஒன்றாகவே கூடி வாழ்தல் வேண்டும்! பிரிவினை தீது! மாகாணப் பிரிவினைகள் வசதிக்காகவேயாம்! இந்தப் பிரிவினை நெடுஞ்சுவராகி விடக்கூடாது. வீட்டில் அறைகள் அறைகளின் சுவர்கள் பிரிவினைத் தன்மை உடையன அல்ல. அவை வசதிகளைக் குறிக்கோளாகக் கொண்டவை. இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனைக் காத்தலே பெளத்த சமய நெறி - கோட்பாடாக விளங்க முடியும்! இலங்கையில் உள்ள சிங்கள நலன்களைக் காப்பதிலேயே தமிழர் சமயம் பண்பாடு ஒளிவிட முடியும்! இதுவே அசோகர் போர் முடிவில் கண் "தர்ம விஜயக் கோட்பாடு” இந்தத் தர்ம விஜயக் கோட்பாடு வெல்க! வளர்க!

என்றும் வேண்டும்

இன்ப அன்பு
அடிகளார்
15. பிறப்பால் இல்லை பிரிவினை

இனிய தமிழ்ச் செல்வ!

ஆரியர்களும் ஆங்கிலேயர்களும் விதைத்த நச்சு விதைகள் கிளைத்துச் செடிகளாகி நச்சுக் கனிகளைத் தந்து கொண்டுள்ளன. ஆம்! சாதிமுறைகள் ஆரியம் தந்தவை. ஆரியர்கள், வருணம், கலாசாரம் என்றெல்லாம் பேசி மானுடத்தைப் பிரித்தனர். ஒரு பிரிவினர், இன்னொரு பிரிவினருக்கு இடையே எந்தச் சூழ்நிலையிலும் கலந்துவிடாத வண்ணம் இந்து மத விதிமுறைகளைக் கடுமையாக்கினர். இந்தப் பிரிவினைப் போக்கினையே ஆங்கில ஏகாதிபத்தியம் தனது ஆட்சிக்கு அரணாக்கிக் கொண்டது. இந்தப் பொல்லாத சாதித் தீமைகளைத் தமிழக மக்கள் கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி வந்துள்ளனர். ஆனால் பயன்தான் கிடைக்கவில்லை. ஆம் செல்வ, இது முற்றிலும் உண்மை! "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவர்வழி வெற்றி பெறவில்லை.