பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/306

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செய்துகொள்ளும் அளவுக்குப் பகைமைச் சேற்றில் சிக்கிச் சீரழியும் ஓர் இனம் எப்படி விடுதலை பெற முடியும்? இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகும்கூட மாநில அமைச்சரவை அமைக்கும் பொறுப்பு வந்தபோது கூட அனைத்துத் தமிழர்களும் ஒன்று படவில்லை; இனிய செல்வ! ஈழத்துத் தமிழர்கள் நமது அனுதாபத்திற்கு உரியவர்கள்-ஆனால் வழிதான் தெரியவில்லை. இனிய செல்வ!

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”

என்பது திருக்குறள். இந்தத் திருக்குறள் அடிப்படையில் பிரச்சனையை அணுக வேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தினைச் செயற்படுத்த அதாவது மாநிலங்களை அமைக்க இலங்கை அரசியல் சட்டத்தில் திருத்தமும் - சேர்க்கையும் செய்யப் பெற்றுள்ளது. இந்த அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் இலங்கைச் சிக்கல் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. நமது பாரதப் பிரதமர் சென்னையில் பேசிய பேச்சு ஊக்கம் தந்தது. ஆனால் இலங்கைப் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ள அரசியல் சட்டங்கள் பாரதப் பிரதமர் பேசியதற்கு ஒப்பவும் இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு இசையவும் அமையவில்லை என்ற ஏக்கமும் நமக்கு இருக்கிறது. இந்திய இலங்கைச் சிக்கலில் மிகவும் முக்கியமானது காணிப் பிரச்சனை, அதாவது தமிழர்கள் வழிவழியாக வாழும் நிலப் பகுதியில் சிங்களவர்களைக் குடியேற்றி, அதன்பின் தமிழர் பிரதிநிதித்துவத்தைப் பறித்துவிடுதல் என்பது. இஃதொரு நியாயமான அச்சமே. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்தந்த மாநிலத்தில் உள்ள காணிகள் மீது உரிமை இருக்கிறது. இதுபோல இலங்கையில் தமிழ் மாகாண அரசுகளில் காணி உரிமையை இலங்கையில் நிறைவேற்றப்பெற்றுள்ள அரசியல் சட்டப் பிரிவுகள் வழங்காதது ஒரு பெரிய குறை. ஆயினும் தொடர்ந்து இந்திய அரசு இலங்கை