பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/311

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



299


ஆட்சிப் பொறுப்பை ஏற்பவரின் முன் உள்ள கடமைகள் என்ன? நாடு எப்படி இருக்கிறது? இன்றுள்ள நிலையில் நாட்டை ஆளும் தகுதி, திறமை யார் மாட்டு இருக்கிறது என்று ஆய்வு செய்து தகுதியுடையவரைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். இதுவே திருக்குறள் காட்டும் தேர்தல் முறை. இனிய செல்வ, தேர்ந்தெடுக்கப் பெறுபவரின் தகுதியே தேர்வுக்கு அளவுகோல். மற்றபடி பணமில்லை! பணம், வாக்களிப்பில் தூண்டு ஆற்றலாக அமையின் நாடு தகுதியில்லாதாரைத் தேர்வு செய்து அழிவைத் தேடிக்கொள்ளும்! இன்று தமிழகத்தில் நடந்தது என்ன? ஒரே அணியில் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் விலை, வன்புதுன்புகள் ஆள் தூக்கல் முதலிய அனைத்துக் கேடுகளும் நடந்து விட்டன. இதுவா மக்களாட்சிமுறை! தலைவர் தேர்தல் தகுதி அடிப்படையில் நடைபெற வேண்டும். இனிய செல்வ, உலக மகாயுத்தத்தின் போது இங்கிலாந்தின் தலைமையமைச்சர் பொறுப்பில் இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலைப் போரில் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்த சர்ச்சிலை அடுத்து வந்த பொதுத் தேர்தலில் இங்கிலாந்து மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கவில்லை. அப்போது சர்ச்சில்,

"என்னுடைய பணி இப்போது தேவை இல்லை" என்று கூறி விளக்கினார். ஆதலால் இன்றைய தமிழ்நாட்டின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு தலைவரைத் தேர்ந்தெடுப்பதே முறை. இதில் வேட்பாளரின் ஆர்வத்தை விட வாக்காளர்களுக்கே ஆர்வம் கூடுதலாக இருக்க வேண்டும். இன்றைய நடைமுறையில் மக்களாட்சியின் தோற்றங்கள் உள்ளனவே தவிர உணர்வுகள் இல்லை. இன்றைய ஜனநாயக முறை, சூதாட்டம் போன்ற ஒன்றாகி விட்டது.

இன்ப அன்பு
அடிகளார்