பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/314

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


"அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்"

என்ற திருக்குறள் நெறியில் அரசுகள், முறை கேடான செல்வத் தொகுப்பாளர்கள் தோன்றாவண்ணம் கண்காணிப்பு ஏற்படுத்த வேண்டும். வாணிகம் நாட்டுடைமையாக்கப் பெறுதல் வேண்டும்; வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் வேண்டும். சில ஆண்டுகளுக்கு ஆடம்பரமான - ஆரவாரமான விழாக்கள் அடியோடு நிறுத்தப் பெறுதல் வேண்டும். இப்போது, இந்த நூற்றாண்டில் நாம் அனைவரும் வறுமையை எதிர்த்துப் போராடி வெற்றிபெறத் தவறிவிட்டால் வரலாறு பழி தூற்றும். ஆதலால், இனிய செல்வ! உடன் வறுமையை எதிர்த்துப் போராட முயற்சி செய்வோமாக!

இன்ப அன்பு
அடிகளார்
21. பலர் கூடிக் காண்டல் ஞானம்

இனிய செல்வ,

சொல்வது சொல்; பலர் கேட்பது சொல். இன்றைய மனித உலகம் தனது காலத்தையும் சக்தியையும் மிகுதியாகச் செலவழிப்பது சொற்களிலேயாம்! எங்கும் பேச்சுக் கச்சேரி நடப்பதைப் பார்க்கிறாய் அல்லவா? மேலும் கருத்தரங்குகள் - கவியரங்குகள் - பட்டி மன்றங்கள் - மாநாடுகள் என்றெல்லாம் அமைத்துக்கொண்டு பேசித் தீர்க்கிறார்கள். இன்றைய சமுதாயத்தில் சொற்பொழிவாற்றுவது ஒரு தகுதியாகிவிட்டது. மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து பேசிக் காண்பதே அறிவியல்! ஆய்வை முடிவு செய்யக்கூட சிலர் தேவை! மாநாடுகள் என்றால் பலர் கூடி ஆய்வு செய்து முடிவு எடுக்கும் அற்புதமான அறிவியலாக இருக்கும்; இருக்க வேண்டும். ஜப்பான் தேசத்தில் ‘ஷக்சி’ (Shuchi) என்ற சொல், வழக்கில் இருக்கிறது. இந்தச் சொல்லுக்குப் பொருள் ‘பலர் கூடிக் கண்ட ஞானம்' (Shuchi is “the wisdom of the many" or