பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/315

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



303


collective wisdom"), என்பது பொருள். ஒருசிலர் கூடினால் நல்லறிவு காணும் பேச்சு நடக்கவேண்டும். பலர் கூடினால், பெரும்பயன் தரக்கூடிய பேச்சு வேண்டும். இனிய செல்வ, நீ சொல்வது உண்மை! இன்று படித்ததைச் சொல்கிறார்கள். அதையும்கூட ஆன்ம அனுபவத்திற்கு உள்ளாக்காமல் அப்படியே ஒப்பிக்கிறார்கள்; பகடை பேசுகிறார்கள். குற்றங்களைக் கூறுகிறார்கள்; பழி தூற்றுகிறார்கள். இதற்காகவா ஆற்றல் மிக்குடைய சொற்கள் பயன்பட வேண்டும். இனியசெல்வ, நமது நிலை இரங்கத்தக்கது.

அண்மையில் ஏப்ரல் 22, 23, 24-இல் சென்னை மறைமலை நகரில் காங்கிரஸ் (இ) மாநாடு நடைபெற்றது. மாநாடு நடந்தது புதிய நகரத்தில்! புதிய புகைவண்டி நிலையத்திற்கு அருகில் புதிய பொலிவுடன்! புதிய விளம்பர உத்திகளுடன் நடந்தது! ஆம். இந்த நாட்டை ஆண்டவர்கள், ஆள்பவர்கள், ஆளப்போகிறவர்கள் மாநாடு நடத்தினார்கள். காங்கிரசுக்கு மகத்தான வரலாற்றுப் புகழ் உண்டு! சென்ற காலத்தில் காங்கிரஸ் செய்த சாதனைகள் பலப்பல!

சுதந்தரத்தை வாங்கிக் கொடுத்து நம்மை மனிதர்களாக்கியதே காங்கிரஸ்தான்! திட்டமிட்ட திசையில் அழைத்துச் சென்றதும் காங்கிரஸ்தான். சென்ற தலைமுறை வரை காங்கிரஸ் துடிப்புடன் செயலாற்றல் மிக்குடைய இயக்கமாக விளங்கிய அத்தகைய துடிப்பை இன்று மறைமலை நகரில் கூடிய கூட்டத்தில் காணமுடியவில்லை. ஏன்? மாநாட்டுப் பேச்சுக்களில் எழுச்சியில்லை! புதிய வேகத்தைக் காணோம். பொருளாதாரத் தீர்மானத்தின் மீது சூடான விவாதம் நடந்திருப்பது உண்மை. அந்த விவாதத்தைச் செய்தித்தாள்கள் தரவில்லை. ஏன்? தொலைக் காட்சியும் வானொலியும் கூட தரவில்லை. நமக்கு நல்லூழின்மையே; இனிய செல்வ, திருவள்ளுவர், மாநாடுகளில் கூடுபவர்கள் "அரும்பயன் ஆயும் அறிவினார்” களாக இருக்கவேண்டும் என்று கூறுகின்றார்.