பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/324

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



விலைவாசி ஏற்றத்தைக் காட்டி ஊதிய உயர்வு கேட்கப் பெறுகிறது. விலைவாசி ஏறியிருப்பது உண்மை. ஆனால் ஊதிய உயர்வு, விலைவாசி ஏற்றத்திற்குப் பரிகாரமாக இயலுமா? ஊதிய உயர்வின் மூலம் அதிகப் பணப்புழக்கம் ஏற்படுகிறது. உடனே விலையும் ஏறிவிடுகிறது. விலை ஏற்றமும் ஊதிய உயர்வும் நச்சுச் சுற்று வளையம் போல் சுற்றி வருகிறது. சுற்றி வந்து கொண்டே இருக்கிறது. இதற்குத் தீர்வுகாண ஒரே ஒரு வழிதான் உண்டு. ‘விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்துக' என்று மைய மாநில அரசுகளைக் கேட்பதுதான்! சீனா போன்ற நாடுகளில் தொடர்ச்சியாகப் பத்து ஆண்டுகள் கூட விலை ஏற்றம் இன்றி ஒரே நிலைப்பாட்டில் நிற்கிறது. நாமும் நமது அரசுகளை விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும்படி கேட்கலாம். இப்படிக் கேட்பது கடமையும்கூட விலை, கட்டுப்படுத்த பெற்றால் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்லது. ஒருக்கால் அரசால் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது போனால் உற்பத்திப் பண்டங்களை வழங்கியும் உற்பத்திச் செலவைக் குறைத்தும் விலையைக் கட்டுப் படுத்தலாம். இத்தகு கோரிக்கைகளை வைத்துப் போராடுதல் நல்லது.

இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் வாழ்க்கைச்செலவுப் புள்ளியும் மாறுபடுகிறது. ஆதலால் ‘ஒரே ஊதியம்’ என்ற கொள்கையைவிட "சீரான வாழ்க்கைக்குரிய ஊதியம்” என்ற கொள்கை வரவேற்கத்தக்கது. ஆனால் இதைக் கணித்து நடைமுறைப்படுத்துவது, எளிதான செயலன்று. அதனால் நாடு முழுவதும் கட்டுப்படுத்தப் பெற்ற விலை-ஒரே வாழ்க்கைச் செலவுப்புள்ளி என்ற நிலை உருவானால் நல்லது. இந்த அடிப்படையிலேயே ஊதிய ஏற்றத் தாழ்வுகளைக் கணிசமாகக் குறைக்கலாம். குறைத்துவிட முடியும். ஊதிய உயர்வுகளைக் கேட்டு "காகித நோட்டுக்களின்" புழக்கத்தை அதிகப்படுத்தி நாட்டின் நிதி நிலையைக் கெடுக்காமல் நியாய விலையில்-கட்டுப்படியாகும் விலையில் நுகர்வுப் பொருள்கள் கேட்பது, எல்லாமட்டத்திலும்