பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/326

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காலம் முதல் பாரதிதாசன் காலம் வரை தொடர்ந்து போராடி வந்துள்ளனர். அது போலவே சமய உலகிலும் அப்பரடிகள் முதல் அண்ணல் காந்தியடிகள் வரை போராடி வந்துள்ளனர். வள்ளல் பெருந்தகை சாதிகளைக் கடுமையாகவே சாடினார். ஆயினும் பயன் கிடைக்கவில்லை. ஏன்? இனிய செல்வ, "புரியாதபுதிர் என்கிறாயா? அப்படியெல்லாம் ஒன்றும் புரியாதது அல்ல. நோயும் தெரிகிறது. நோயின் காரணமும் தெரிகிறது. ஆனால் மருத்துவம் செய்யும் துணிவு தான் இல்லை. ஒருபுறம் பழைமைப்பிடிப்பு தடையாக இருக்கிறது. மறுபுறம் தேர்தல் தடையாக இருக்கிறது. இவற்றுள்ளும் பழைமைப் பிடிப்பாளர்கள் கை தளர்ந்து வருகிறது. பழைமைப் பற்றாளர்கள் சமுதாய மேலாண்மை உடையவர்கள் அல்ல. அரசியல், தேர்தல் வெற்றி-தோல்வி உணர்வுகள் வழிப்பட்ட அச்சம் பெரிதும் தடை! இனிய செல்வ, இந்தத் தவற்றுக்கு நாம் அனைவரும் மதிக்கும் பெருந்தலைவர்கள் கூட இரையாகின்றனர். என்ன செய்வது? நாட்டின் ஊழ்வினை அதுவோ?

ஆதி திராவிட மக்கள் - ஹரிஜன சமுதாயத்தினர், சமுதாய அமைப்பின் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள். இது நூற்றுக்கு நூறு உண்மை. அவர்கள் இந்துமத சாத்திரங்கள் அடிப்படையில் மிகவும் கேவலமாக, விலங்கினும் மோசமாக நடத்தப்பட்டார்கள். இவர்களை மனிதர்களாக்க வேண்டியது உடனடியான பணி! தலையாய கடனும் கூட; இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதைகள் இதற்குரிய பரிகாரத்தை அரசியல் சட்டத்திலேயே கண்டுள்ளனர். இந்த உணர்வும் செயல்முறையும் வரவேற்கத்தக்கன! பாராட்டத்தக்கன! ஆனாலும் தீண்டாமையை பின் தங்கிய நிலையைப் பிரதானப்படுத்தி ‘சாதிகளை’ விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமா? என்று எண்ணத் தோன்றுகிறது. இனிய செல்வ, சாதிகளை மறக்கடிப்பதற்குரிய முயற்சி இது. தீண்டாமையிலும் பின் தங்கிய நிலையிலும் அல்லலுறுவதைக் குடும்ப அடிப்படையில் கணக்கெடுத்துத் தீர்வுகாண