பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/327

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



315


வழிவகை கண்டிருந்தால் இன்று பரவலாக அந்தப் பயன் சென்று சேர்ந்திருக்கும். இன்று இந்தப் பயனை அடைந்திருப்பவர்கள் இந்தத் தொகுதியில் கொஞ்சம் வளர்ந்த வல்லாண்மையுடையவர்களேயாம். கடை கோடி மனிதனுக்கு ஒன்றுமே கிடைக்க வில்லை. நாமும் சுதந்திரம் பெற்ற நாற்பதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடி விட்டோம். இன்று ஆதி திராவிடர்களுக்குரிய மேம்பாட்டுப் பணிகள் ‘சாதியின்’ பெயராலேயே செய்யப் பெறுவதால் சாதிகளை மறக்க முடியவில்லை. மாறாகச் சலுகைகளை அடைய சாதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயமும் தோன்றி விட்டது. இனிய செல்வ, இன்றுள்ள மனப் போக்கு வளர்ந்தால், நமது நாட்டின் தீண்டாமை போகாது. ஆதி திராவிடர்கள் என்ற சமுதாய அமைப்பு நீங்கி எல்லோரும் ஒர் குலம் என்ற நிலை உருவாகாது. இது தொடர்பாக நிறைய உனக்கு எழுத வேண்டியுள்ளது. அடுத்த கடிதத்தில் விரிவாக எழுதுகின்றோம்.

அதற்குள்ளாக,

"நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை”

என்ற திருக்குறளைப் படித்து வைத்துக் கொள்! பயன் தரும்! மற்றவை பின்.

இன்ப அன்பு
அடிகளார்
26. சலுகையின் எல்லை - 2

இனிய செல்வ,

நல்வாழ்த்துக்கள்! சென்ற கடிதத்தைக் கவனமாகப் படித்திருப்பாய் என்று நம்புகின்றோம். இந்தக் கடிதம் எழுதுவதற்குள் ஒரு புதுச்செய்தி! கிறிஸ்தவர்கள் மாநாடு நடத்தியுள்ளனர்; தார்மீக மாநாடு நடத்தியுள்ளனர். அதில் மதம் மாறிய கிறிஸ்தவ ஹரிஜனங்களுக்கும் இந்து ஆதி திராவிடர்களுக்கு வழங்குவது போலச் சலுகை கொடுக்கத்