பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/351

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



339


மன்றத்தில் சட்டமியற்ற முயற்சி செய்யலாம். இப்பொழுது மைய அரசு எடுத்துக் கொண்டிருக்கிற அணுகுமுறை ஏற்கெனவே மைய மாநில அரசுகளுக்கு இருக்கிற இடை வெளியை அதிகப்படுத்த வாய்ப்பளித்திருக்கிறது. ஒரு நல்ல காரியத்தைச் செய்யும்போது மைய அரசு தனது அணுகு முறையின் காரணமாகத் தவறுகள் நேரும்படி அனுமதித்து விடக் கூடாது. ஆதலால், உடனடியாக மைய அரசு, ஊராட்சி மன்றங்களைப் பொறுத்தவரையில் கட்டாயத் தேர்தல், திட்டமிடும் அதிகாரம் திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் நிதியியல் பொறுப்பு ஆகியவற்றிற்கு உரிமையும் ஒப்புறுதியும் தருகிற ஒரு சட்ட முன்வரவைத் தந்து அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுக்குத் தந்து அந்தந்த மாநிலங்களில் சட்டம் இயற்றும்படி செய்யலாம். இதுவே சரியான அணுகுமுறை.

நல்ல காரியங்களை எண்ணினால் மட்டும் போதாது. செய்தால் மட்டும் போதாது. அவற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் ஐயம் கொள்ளாத வகையில் அவர்களுடைய நம்பிக்கையையும் பெறத்தக்கவகையில் செய்வதுதான் முறையான அரசியலுக்குரிய பண்பு. ஆதலால்,

"நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை"

என்ற திருக்குறள் நெறியைத் தேறி, அந்நெறியில் செயற்பட வேண்டும் என்பது இந்திய ஒருமைப்பாட்டை விரும்புகிற அனைவருடைய விருப்பம்.

இன்ப அன்பு
அடிகளார்
34. எழுத்துச் சீர்திருத்தம்

இனிய செல்வ!

திருக்குறள் ஒரு அற்புதமான நூல்! வாழ்வியலின் துறைதோறும் விளக்கும் பெருநூல்! இதனால் மட்டும் ஒரு நூல் சிறப்புடையதாகாது. எதிர்வரும் காலத்திற்கு-