பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/367

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



355


"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

(423)

என்று அழகுற அறிவுரை கூறியுள்ளார்.

இனிய செல்வ, இந்தக் குறிக்கோள்களை அடைவது எளிதல்ல. சுயநல சக்திகள் தடைகளாகக் குறுக்கே வந்து நிற்கும். ஆட்சியையே கூடக் கவிழ்த்து விடுவதாகப் பயமுறுத்தும். இதுவே, நமது சென்றகால வரலாறு! இனிய செல்வ, குறிக்கோளில் ஊசலாட்டம் இல்லாதவர்கள் தேவை! சுயநலத் தன்மையுடைய சமுதாயப் பிற்போக்குச் சக்திகளுடன் அதிகாரப் பசி காரணமாகச் சமாதானம் செய்து கொண்டு குறிக்கோள்களைக் காற்றில் பறக்க விடுபவர்களாக இருக்கக் கூடாது. இனிய செல்வ, இந்த விவேகம் நமது வாக்காளர்களுக்கு என்று வருகிறதோ, அன்றுதான் நமக்கு நல்ல காலம்! தேர்தலின் முடிவை எதிர்பார்த்து......

இன்ப அன்பு
அடிகளார்
40. நல்லன நடப்பதாகுக!

இனிய செல்வ,

நமது நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் ஒருவாறாக நடந்து முடிந்துவிட்டது. ஆனால், நமது நாட்டு வாக்காளர்கள் தேர்தலுக்குப் பின் தெளிவை உண்டாக்காமல் குழப்பத்தை உண்டாக்கிவிட்டார்கள். இதனை நினைக்கும் பொழுது

"தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்"

(510)

என்ற திருக்குறள் நினைவுக்கு வருகிறது. வாக்களிப்பு என்பது நமது தலைவிதியை அதாவது சமூக, பொருளாதாரத்தை வளர்த்து நல்வாழ்க்கையை அமைக்கக் கூடியது என்று நினைக்கிறார்களா? அல்லது சீட்டாட்டத்தில் உட்கார்ந்து