பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/372

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வயப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் உண்டு, உடுத்து வாழ்வதே கூடப் பிடிக்காது! இஃது அழுக்காற்றின் இயல்பு! அழுக்காறு கையாலாகாக் குணமுடையவர்களின் குணம்! இனிய செல்வ, திருக்குறளைப் படி!

"உடுப்பது உம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்”

(1079)
இன்ப அன்பு
அடிகளார்
42. தேவரனையர் கயவர்

இனிய செல்வ,

நமது மரபில் தேவர், தேவலோகம் என்றெல்லாம் பேசக்கேட்டிருக்கிறாய் அல்லவா? அண்மையில் ஒரு கூட்டத்தில் தேவர்கள் வாழும் கோட்டை என்று ஒருவர் பேசினார்! கூட்டத்தில் தேவகோட்டையைச் சேர்ந்தவர்கள் பலர் இருந்தார்கள். நாம் தேவர்கள் வாழும் கோட்டையல்ல என்று வாதாடினோம் ஏன்? இனிய செல்வ, தேவர்கள் புராண இலக்கியங்களின்படி கூடப் பாராட்டப்படக் கூடியவர்கள் அல்லர். தேவர்கள், பலரோடு கூடி ஒன்றாக வாழ மாட்டார்கள்! தேவர்களுக்கிடையில் நடந்த சண்டைகள் பற்றிப் புராணங்கள் நிறைய பேசுகின்றன. தேவர்கள் இந்திரன் மனைவி இந்திராணிக்காகக் கூடச் சண்டை போட்டுக் கொள்வார்கள். தேவகோட்டையில், கேட்டதெல்லாம் கொடுக்கும் கற்பகத்தரு உண்டு; காமதேனு உண்டு. அப்புறமும் ஏன் சண்டை என்றா கேட்கிறாய்? அதுதான் புரியாத புதிர்! தேவர்கள் மற்றவர்களுடன் உயர் பண்புடன் நடந்து கூடிவாழக் கற்றுக்கொண்டவர்கள் அல்லர். மற்றவர்களுடைய அறிவுரைகளும் இவர்களிடையே விலை போகாது. தேவர்கள் தாம் நினைத்தபடியெல்லாம் காரியங்களைச் செய்வர். தேவர்களை அவர்களுடைய விருப்பங்களே ஆட்டிப்படைக்கும். அவர்களிடத்தில் ஆய்வும்