பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/378

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அடையாளம் எதையும் காணோம். அல்லது அறிவியல் ஆய்வு மையங்களுக்கு நாட்டின் வளர்ச்சிக்குரிய தொழில் நுட்பங்களைத் தருக அல்லது கண்டு தருக என்ற கேட்புகள் கிடைத்ததாகவும் தெரியவில்லை. இனிய செல்வ, நமது நாட்டின் நிலவளத்தில் 17 விழுக்காடுதான் பயன் படுத்துகின்றோம். மீதி, பயன்பாட்டுக்கு ‘இன்னமும் வரவில்லை’ தண்ணீரில் கணிசமான பகுதி வீணாகிப் போகிறது. ஏன்? நம்முடைய நாட்டின் ஆற்றலில் பெரும்பகுதி மனித ஆற்றல்தான்! இந்த மனித ஆற்றல் இன்னமும் முழுமையாகப் பயன்படுத்தப் படவில்லையே! இனிய செல்வ, அரசுகள் நாட்டின் வளத்தைப் பெருக்க, புதிய புதிய யுத்திகளைக் கையாண்டு பயன்பாட்டுக்கு வராத வளங்களை அனுபவத்திற்குக் கொண்டுவர வேண்டும். உற்பத்தித் திறனைக் கூட்டவேண்டும். ஏற்றுமதியை அதிகரிக்கவேண்டும். இதுவே அரசு, நாட்டின் வளத்தைப் பெருக்கும் வழிகள்! இதனை விட்டு விட்டு அஞ்சற் கட்டணங்களைக் கூட்டுவது, போன்றவைகளால் மேலும் விலைகள் கூடும். மேலும் ஏழைகளே ஏழைகளாவர். அது போலவே லாட்டரி சீட்டுகள் விற்பது. மதுக்கடைகளைத் திறப்பது போன்றவைகள் நாட்டின் வளம் பெருக்கும் வழிமுறைகளல்ல. பனம் ஏழைகளிடத்திலிருந்து அரசின் கருவூலத்திற்கு மாறும். இரண்டு இடங்களிலும் அந்தப்பணம் பயனீட்டு முறை என்ற செல்வ இயக்கத்திலிருந்து பிறழ்கிறது. இனிய செல்வ,

"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு”

(385)

என்பது திருக்குறள்! இயற்றலும் என்ற சொல்லுக்கும் பொருள் செல்வம் ஈட்டுதலுக்குரிய புதிய புதிய வாயில்களைக் காணுதல் என்பதாகும். இனிய செல்வ, அடுத்து வரும் மடல்கள்! தொடர்ந்து எழுத எண்ணம்.

இன்ப அன்பு
அடிகளார்