பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/380

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உணர்ச்சியே காரணம் ஏன்? காவிரி நடுவர் மன்றத்திற்குப் போகிறது? கர்நாடகத்துடன் நமக்குள்ள காவிரி நீர்ச் சிக்கல்கூட ‘நான்’ ‘எனது’ தானே! யாருக்குத் தண்னீர் தேவை? என்பதல்ல விவாதத்தின் அடிப்படை! உரிமை உணர்வே அடிப்படை. ‘எனது’ ‘உனது’ என்ற சொற்கள் வழக்கிற்கு வந்த பின்தான் சண்டைகள் ஏற்படுகின்றன. இன்று எங்கும் உரிமைச் சண்டைகள்! இந்த உரிமைச் சண்டைகள் வந்த பிறகு மனித குலம் சமூக உணர்விலிருந்து நீண்ட தூரம் விலகிப் போய் விட்டது. சுதந்திரம் வந்து 43 ஆண்டுகள் ஆன பிறகும் இந்தியாவில் "இந்தியர்கள்" தோன்றவில்லை. இனிய செல்வ, பாரதி ‘நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்!” என்று பாடினான். இன்று ‘நாமும் இல்லை; நமதும் இல்லை’. எங்கு நோக்கினும் ‘என்னுடையது’ என்ற உணர்ச்சி! இந்த உணர்ச்சி மிருகத்தனமாக வளர்கிறது என்பதன் அடையாளங்கள் பலப்பல. ‘ராமஜன்ம பூமி-பாபர் மசூதி’ எண்ணப் போக்குகள் என்ன? மத நம்பிக்கைகளா? இல்லை! இல்லை! ‘என்னுடைய மதம்’ என்ற உணர்ச்சிமிக்க ஆரவாரச் சந்தடியில் கடவுள் காணாமல் போய் விட்டார்! 'சிவசேனை' என்ன சொல்கிறது? இன்னும் எண்ணற்ற உதாரணங்களைக் காட்ட முடியும்.

இனிய செல்வ, விருப்பங்கள் - ஆர்வங்கள் செருக்குகளாக வளரக் கூடாது. செருக்கின் இயல்பென்ன? செருக்கு மற்றவர்களை மதிக்காது! மற்றவர் கருத்தை மதிக்காது! மற்றவர்கள் உரிமைகளுக்குப் பாதுகாப்பு இல்லை! தான் நினைப்பதே சரி! அதுவே வேதம் என்று கூறும்.

இனிய செல்வ, ‘யான்’ ‘எனது' என்ற செருக்கு அறவே கூடாது! ஏன்? இனிய செல்வ, ‘நான்’ என்பது அற்ற நிலையே இன்பநிலை! இன்ப அன்பு நிலை! இந்தியாவிற்கு இந்த ஞானோதயம் என்று வரும்! இன்றைய இந்தியாவின் போக்கு எப்படி இருக்கிறது? இன்றைய இந்தியாவில் சாதி, மதச்